உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை – பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது என கோட்டாபய தெரிவித்தார் – மல்கம் ரஞ்சித்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில் உரையாற்றியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனக்கு நெருக்கமான அமைப்புகளை சேர்ந்த நபர்களை கைதுசெய்யவேண்டியிருக்கும் என்பதால் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது என கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை தன்னிடம் தெரிவித்தார் என கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து புதிய விசாரணைகளை ஆரம்பிக்கும் ஆர்வத்தை தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை எனவும் கர்தினால் விமர்சனத்தை முன்வைத்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் கண்டறிய சுதந்திரமானதும், நியாயமானதுமான விசாரணையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் நீதியை மறைத்து வைக்க முடியாது எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தேவாலயத்தில் இன்று காலை 8.40க்கு விசேட ஆராதனை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் இந்த ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அதேநேரம், நாடளாவிய ரீதியிலுள்ள பல தேவாலயங்களிலும் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக விசேட ஆராதனைகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.