உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழரசுக் கட்சி

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்ரி மகேந்திரன், எம்.ஏ சுமந்திரன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டமைப்பிற்கு வெளியிலுள்ள தமிழ் கட்சிகளை இணைத்துக் கொண்டு போட்டியிடுவதா என்பன தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலை எதிர்கொண்டதை போல எதிர்கொள்ளலாம் என ரெலோ கூறியுள்ளது.

எனினும், கடந்த முறை தமக்கு உறுதியளிக்கப்பட்ட சபைகள் வழங்கப்படாததால் அது பற்றி மீள பேசப்பட வேண்டுமென புளொட் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், தேர்தல் நெருங்கி விட்டதால், அதைபற்றி பேச அவகாசமில்லையென தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

இறுதியில், தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பங்காளிக்கட்சிகள் எப்படி போட்டியிடுவதென விரைவில் அறிவிப்பார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரினை பயன்படுத்தி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.