உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்தப்படுமா என்பது சந்தேகத்திற்குரியது. தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு கூட திறைச்சேரி இதுவரை நிதி ஒதுக்கவில்லை. அரசியலமைப்பின் 5 உறுப்பினர்கள் உறுதியாக இருந்தால் அரசியலமைப்பு பேரவை ஊடாக தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரச சேவையாளர்களுக்கு மாத சம்பளம் வழங்குவது கடினமாக உள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச சேவைக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைமை தனியார் துறைக்கும் தாக்கம் செலுத்தும். அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.
தனி நபரின் மாத வருமானத்தை காட்டிலும் அத்தியாவசிய செலவுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. வரி அதிகரிப்பினால் அதிக சம்பளம் பெறும் தரப்பினர் நாட்டை விட்டு நிச்சயம் வெளியேறுவார்கள்.பிறிதொரு தரப்பினர் சட்டத்திற்கு முரணான வகையில் நாட்டை விட்டு வெளியேறுவார்கள், மூளைசாலிகளை நாட்டை விட்டு வெளியேற்றி தொடர்ந்து ஆட்சி செய்ய அரசாங்கம் முயற்சி செய்கிறது.
அரசாங்கத்தின் தவறான வரி அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.வரி கொள்கை தொடர்பில் பௌத்த மதம் பல விடயங்களை போதித்துள்ளது. பௌத்த மத கருத்துக்களை போதிக்கும் ஜனாதிபதி வரி கொள்கை தொடர்பான அறக்கருத்தை அறியாமல் இருப்பது ஆச்சரியத்திற்குரியது.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு அமைய அரசியலமைப்பு பேரவை நேற்று புதன்கிழமை கூடியது. அரசியலமைப்பு பேரவை ஊடாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய நியமனங்களை வழங்கி தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அரசியலமைப்பு பேரவையில் சபாநாயகர்,பிரதமர்,ஜனாதிபதியின் பிரதிநிதி மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதி ஆகியோர் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக உள்ளார்கள். எதிர்க்கட்சி தலைவர்,எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதி மற்றும் மூன்று சிவில் உறுப்பினர்கள் ஆகியோர் அரசாங்கத்தின் பிரதிநிதிகளை காட்டிலும் உறுப்பினர் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர், ஆகவே அரசியலமைப்பு பேரவை ஊடாக தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக 5 உறுப்பினர்கள் உறுதியாக இருந்தால் வெற்றிக்கொள்ளலாம்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்தப்படுமா என்பது சந்தேகத்திற்குரியது. ஏனெனில் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க திறைச்சேரி இதுவரை நிதி ஒதுக்கவில்லை. திறைச்சேரி நிதி வழங்காவிட்டால் தேர்தலை நடத்த முடியாது,தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் தனிப்பட்ட நிதியை கொண்டு தேர்தலை நடத்த முடியாது என்றார்.