சர்வதேச நாணய நிதியம் கூறும் அனைத்தையும் செயற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை – ஹர்ஷ

நியாயமான முறையில் தனிநபர் வருமான வரியை அறவிடுவதற்கான வேலைத்திட்டம் எம்மிடம் இருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நிச்சயம் வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அவை பொது மக்களின் கழுத்தை நெரிக்கும் வரி திருத்தமாக அமையாது என்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அத்தோடு சர்வதேச நாணய நிதியம் கூறும் அனைத்தையும் செயற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற போதிலும் , இன்று நாம் அதன் நிபந்தனைகளுக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ளோம் என்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தனிநபர் வருமான வரி 36 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாட்டைப் போன்றே , திறைசேரியில் ரூபாவிற்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. இதற்கான தீர்வு என்ன? நிச்சயமாக பணத்தை அச்சிட முடியாது. எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த காலங்களை விட தற்போது பணம் அச்சிடும் வீதம் குறைவடைந்துள்ளது.

சீனி வரி குறைப்பின் மூலம் 20 – 25 பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளது. அதனை மீளப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து தனிநபர் வருமான வரியை கண்மூடித்தனமாக அதிகரிப்பது நியாயமற்றது. வருமானத்தை அதிகரிப்பதற்கு வரி அறவிடப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் தற்போதுள்ளதை விட நியாயமான முறையில் வரியை அறவிட முடியும்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நிச்சயம் வரி திருத்தம் மேற்கொள்ளப்படும். அரசாங்கத்தின் வருமானமும் குறைவடையாமல் , அதே சந்தர்ப்பத்தில் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் எமது ஆட்சியில் வரி கொள்கை பின்பற்றப்படும். அதே போன்று ஏற்றுமதி பொருளாதாரத்திலும்அதிக அவதானம் செலுத்தப்படும்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திற்கு சொந்தமான நாடு அல்ல. எனவே அவர்கள் கூறும் அனைத்தையும் செயற்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. நாம் முன்வைக்கும் வேலைத்திட்டத்தை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும். நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற நேரடி பேச்சுவார்த்தைகளின் போது நான் இதனைக் கடுமையாக வலியுறுத்தினேன்.

ஆனால் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றோம். இவ்வாறு தொடர்ச்சியாக பயணிக்க முடியாது. இதற்கு மாற்று வேலைத்திட்டம் எம்மிடமிருக்கிறது. அதனை நாம் பாராளுமன்றத்திலும் சமர்ப்பித்திருக்கின்றோம் என்றார்.