ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடு

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்ட இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளது.

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அண்மையில் அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து, அதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அதன் ஓரங்கமாக மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளனர்.

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்த சட்டத்தின் ஊடாக அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்குத் தயாராகிவருவதாகவும், எனவே இவ்விடயத்தில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறும் அம்முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் சானக பண்டார, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஓர் உறுப்புநாடு எனவும், ஆகவே மக்களின் ஜனநாயகத்தை ஒடுக்குவதற்குத் தயாராகிவரும் அரசாங்கத்தின் இந்நடவடிக்கையில் ஐ.நா உடனடியாகத் தலையிடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

‘பொதுமக்கள் தகவல்களை அறிந்துகொள்வதற்குத் தாம் கொண்டிருக்கும் உரிமையை ஊடகங்களின் வாயிலாகவே அனுபவிக்கின்றனர். இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது அரசாங்கமும் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்கு முற்படுகின்றனர்’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ‘ஊடகங்கள்மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் பொதுவானதொரு கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது. ஆனால் சர்வாதிகாரிகளால் எப்போதும் நாட்டை ஆளமுடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் அத்தகைய ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடித்துவிடுவார்கள்’ என்றும் சானக பண்டார எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.