பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு கருவியாக மாத்திரமே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காணப்படுகிறது.
பஷில் ராஜபக்ஷவைப் போன்று எம்மால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்திற்கு எதிராகவே நாம் வாக்களிப்போம் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள சுதந்திர மக்கள் காங்ரஸ் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சுதந்திர மக்கள் காங்கிரஸ் வரவு – செலவு திட்டத்திற்கு எதிராகவே வாக்களிக்கும். காரணம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வும் இதில் வழங்கப்படவில்லை.
கடும் நெருக்கடிகளை மக்கள் எதிர்கொண்டுள்ள போதிலும் கூட , அது தொடர்பில் கவனம் செலுத்தாமல் அடுத்த வருடமும் மின்சார கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் தொழிற்சாலைகள் மூடும் நிலையிலும் , ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழக்கும் நிலையிலும் உள்ளனர்.
ஆனால் இது தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது பாராளுமன்றத்தில் மக்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற பொதுஜன பெரமுனவிற்கோ எவ்வித அக்கறையும் இல்லை.
தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒரு கருவியாகவே உள்ளது.
அதற்கமைய இவ்விரு கட்சிகளுக்குமிடையில் காணப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மேலும் 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரகசிய ஒப்பந்தத்தின் காரணமாகவே பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறெனில் அவர் ஐக்கிய தேசிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் எம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தலின் மூவலமே யார் கூறிய கருத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றார்.