ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினர் இன்று(23) காலை 8.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனை சந்தித்து தமது திட்டம் தொடர்பாக கலந்துரையாடினர்.

உலக உணவுத்திட்டத்தின் சகோதர நிறுவனமான ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம்(UNFPA) சுகாதாரம் மற்றும் நலன் பேணல் சேவைகளுக்கான மேலதிக பண உதவியாக ஐயாயிரம் ரூபாவினை வழங்கும் திட்டத்தினை முல்லைத்தீவில் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதனை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் சுகாதார வைத்திய சேவைகள் அதற்கான போக்குவரத்து மற்றும் போசாக்கு போன்றவற்றிற்கு பயன்படுத்த முடியும்.

இதேவேளை உலக உணவுத் திட்டம்(WFP) உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியை முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கி வருகிறது.

தாய்வழி சுகாதாரம் மற்றும் விரிவான பாலியல் கல்வி மற்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அண்மைய பொருளாதார நிலைமையின் விளைவாகWFP, UNFPA உடன் இணைந்து மிகவும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க அரசாங்கத்திற்கு உதவுவதுடன், குறிப்பாக பெண்களின் அத்தியாவசிய தேவைகளை பண மானியம் மூலம் பூர்த்தி செய்ய உத்தேசித்துள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட பல்வேறு சமீபத்திய ஆய்வுகளின்படி, பொருளாதார நெருக்கடியால் பெண்கள் விகிதாசாரத்தில் பாதிக்கப்படுகின்றனர். அடிப்படைப் பொருட்களுக்கான விலைகள் உயர்ந்துள்ளதால், WFP மற்றும் UNFPA பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு முன்னுரிமையாக இருப்பதை உறுதிப்படுத்தும் திட்டமாக இது அமையவுள்ளது.

குறித்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அதிகாரிகளான நிசாடி மற்றும் சிகார் ஆகியோருடன் உலக உணவுத் திட்டத்தின் மாவ‌ட்ட பொறுப்பதிகாரி ஜெயபவாணி, மாவட்ட உலக உணவுத்திட்ட உத்தியோகத்தர்கள், சர்வோதயம் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.