ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் கொழும்பிலுள்ள இல்லத்தில் நேற்று மாலை இச்சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கையில் தமிழர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள், பயங்ககரவாதத் தடைச்சட்டம் நீக்கம், அரசியல் கைதிகளின் பிரச்சினை போன்றன தொடர்பிலும் சமகால அரசியல் தொடர்பாகவும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.