ஐ.நா.வில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அதிருப்தி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மைய குழுவினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான வரைபு தீர்மானம் அதிருப்தியை அளிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது முந்தைய அறிக்கையில் பரிந்துரைத்ததை இந்த வரைவுத் தீர்மானமும் இன்னமும் உள்ளடக்கவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதே பரிந்துரையையே அனைத்து முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்களும் ஒன்பது இலங்கைக்கு வருகை தந்த முன்னாள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் இலங்கை தொடர்பான ஐ.நா நிபுணர்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் முன்வைத்துள்ளனர்.

மூத்த ஐ.நா அதிகாரிகளின் இந்த கூட்டு பரிந்துரையை முன்னிறுத்தி, நாங்கள் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பாதிக்கப்பட்ட தரப்பினர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் ஆகியோர் மைய குழு நாடுகளுக்கு கூட்டாக கடிதம் ஒன்றை எழுதி இருந்தோம். அக்கடிதத்தில் அவர்களின் தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தோம்.

இலங்கை மீதான ஐ.நா தீர்மான செயல்முறையின் முக்கியமான இந்த தருணத்தில், இத் தீர்மானத்திலாவது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையையும் ஐ.நா.வின் மூத்த அதிகாரிகளின் கோரிக்கையையும் புறக்கணிக்காது சேர்த்துக் கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமை மன்ற உறுப்பினர்களை குறிப்பாக இந்தியாவை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.