இலங்கைக்குக் கடந்த ஒரு தசாப்தகாலமாக விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட ஆணையாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க்கின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (19) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் முதல்நாள் அமர்வில் தொடக்கவுரை ஆற்றுகையிலேயே இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
இலங்கையை எடுத்துநோக்குமிடத்து, பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் கூறுகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பது கவலைக்குரிய விடயமெனச் சுட்டிக்காட்டியுள்ள உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க், ‘இருப்பினும் இலங்கை தொடர்ச்சியாக எம்மோடு இணைந்து செயலாற்றிவருகின்றது’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஒரு தசாப்தகாலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணைபெற்ற பலர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததாகவும், அவர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டுமெனத் தாம் ஊக்குவிப்பதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவாவில் திங்கட்கிழமை (19) ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுலை மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தொடரின் திங்கட்கிழமை (19) ஆரம்ப அமர்வில் இலங்கை குறித்து மிகச்சொற்பளவான விடயங்கள் மாத்திரமே பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை (21) இலங்கை நேரப்படி மாலை 6.30 மணி (ஜெனிவா நேரப்படி பி.ப 3 மணிக்கு) இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை வாசிக்கப்படவுள்ளது.
இவ்வறிக்கையில் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற 51/1 தீர்மானத்தின் பிரகாரம் நாட்டின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல்மோசடிகள் என்பன மனித உரிமைகள்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.
அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகள் தமது கரிசனைகளை வெளிப்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டாலும், இம்முறை இலங்கை தொடர்பில் புதிய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படமாட்டாது.