பாடசாலைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் அமைக்க இந்தியா நிதியுதவி

காலி மாவட்டத்திலுள்ள 200 பாடசாலைகளில் இந்தியாவின் நிதியுதவியின் கீழ் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறைகளை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க ஆகியோருக்கிடையில் திங்கட்கிழமை (19) இத்திட்டம் தொடர்பான இராஜதந்திர குறிப்புக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன , துணை உயர் ஸ்தானிகர், வினோத் கே. ஜேக்கப் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்திய அரசின் மானிய உதவியின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், வசதி குறைந்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடையே டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையின் கல்வித் துறையில் இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல மானியத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இலங்கைக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த உதவி தற்போது சுமார் 5 பில்லியன் டொலர்களாகவுள்ளது.

அதில் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானியமாகும். நாட்டின் 25 மாவட்டங்களில் 65க்கும் மேற்பட்ட மானியத் திட்டங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 20க்கும் மேற்பட்ட மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன.

இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் 1990 சுவசேரிய ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை இலங்கையில் இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட முதன்மையான மானியத் திட்டங்களாகும்.