வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு எத்தனை அநீதி நடந்தது என்பது இன்னும் இந்த உலகத்துக்கு வெளிச்சமாகவில்லை. ஆனால் அவர்களைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இரண்டு தசாப்தத்திற்கும் மேலாக அநீதிகளையும் புறக்கணிப்புக்களையும் தாண்டி வேறேதும் நிகழ்ந்துவிடவில்லை. என்றோ ஓர் நாள் தன் மகனையோ, கணவனையோ, அண்ணனையோ, தம்பியையோ பார்த்த நினைவையும் அவர்களின் நிலைமை என்னவென்று அறிவதற்காகவே பல படிகள் ஏறியிறங்கிய புகைப்படங்களையும் மட்டுமே ஆதாரமாக கொண்டு இன்னும் கண்ணீரோடு காத்திருக்கின்றனர் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கடந்த 20 ஆம் திகதி இரண்டாண்டு பூர்த்தியானதைத்தொடர்ந்து கிளிநொச்சியில் உறவுகள் தீச்சட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
2000 ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட மகனை 21 வருடங்களாக தேடிவரும் 61 வயதான தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி தன்னுடைய மகனுக்கு என்ன நடந்து என்று தெரியாமலேயே உயிரிழந்தார்.
இது முதல் முறையல்ல. தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தேடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே 75 உயிர்கள் ஏக்கங்களோடு மண்ணில் இருந்து மறைந்தன.
தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி
இந்நிலையில் யுத்தத்தினால் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் நிலை குறித்து அதிருப்தியடைவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினர்களான சுபலக்ஷ்மி, ஷியாமளா ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய பின்னரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
“உங்களுடைய மகனையோ, கணவனையோ இழப்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது.
இதுவே யுத்தத்தால் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் நிலை. ஒரு பொறுப்பான அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் பரிந்துரைகளை அவர்களின் வலிகளை ஆற்றுவதற்காகவாவது மதிப்பளித்து பரிசீலனை செய்ய வேண்டும்.
ஆனால் அவர்களின் குடும்பங்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே இன்னமும் இலங்கை முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறது. நாட்டின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வாறானவையாக இருந்தாலும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களின் குடும்பத்தவர்களுக்கு உள்ளது.” என்றார்.
இது குறித்து நேற்று அவரோடு சந்திப்பினை மேற்கொண்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினரொருவரை தொடர்பு கொண்டு வினவிய போது
“2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது என்னோடு வந்த என்னுடைய மகனை இராணுவத்தினர் வந்து அழைத்துச்சென்றனர். மறுநாள் முகாம் ஒன்றில் வந்து சந்திக்கும் படி என்னிடம் சொல்லி விட்டு அழைத்துச்சென்று விட்டனர்.
மறுநாள் முகாமிற்கு சென்ற பொழுது நான் வெளியேயிருந்து அவனுக்கு கைகாட்டினேன். ஆனால் அவன் என்னைப் பார்த்தானா இல்லையா என்பதுகூட தெரியாது. அதற்கு பின்னர் அவனை அந்த முகாமில் காணவில்லை. பின்னர் ஓமந்தையிலுள்ள ஒரு முகாமில் அவனைப் பார்த்ததாக எனக்குத்தெரிந்த சிலர் சொன்னார்கள். அதற்குப்பின்னர் அவனை யாரும் பார்க்கவில்லை. அவனுக்கு என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. இதனை நாங்கள் அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்தோம்.
காணாமல் போன எங்கள் உறவினர்கள் பற்றி தெரியும் வரை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்த அவர் உண்மையைக் கண்டறிந்தால் மட்டும் போதுமா? இல்லாவிட்டால் இதற்கு காரணமானவர்களுக்கு தண்டனையும் வழங்க வேண்டுமா? என்று எம்மிடம் வினவினார்.
ஆனால் எங்களுடைய பதில் ஒன்று தான். அவர்களுக்கு என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் அடிப்படை வேண்டுகோளாக உள்ளது. எங்கள் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் என்ன நடந்தது என்று கூட தெரியாமல் நாங்கள் எங்கள் ஒவ்வொரு நாளையும் மிகுந்த ஏக்கத்தோடு கடந்து வருகிறோம்.
அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதை மட்டுமாவது தெரியப்படுத்துங்கள். உயிரோடு இல்லையென்றால் அவர்கள் உயிரிழந்த தினத்தை சொல்லுங்கள். அநியாயமாக கொல்லப்பட்ட அவர்களின் ஆன்மா சாந்தியடைய கிரியைகளைச்செய்வதற்கு ஒரு நாள் கூட இல்லை என்பது எத்தனை துன்பமானது என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ள மறுக்கிறது.
காணாமலாக்கப்பட்டவர்களுக்கான ஆணைக்குழுக்கள் பல வந்து போய் விட்டன. இன்னும் எத்தனை பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என்பதைக்கூட எந்த ஆணைக்குழுவுக்கு சரியாக தெரிவிக்கவில்லை.
காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் இதுவரை மன்னாரில் வெறும் 333 பேரே காணாமலாக்கப்பட்டுள்ளதாகவும் சரியான தரவுகளை தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.
காணாமலாக்கப்பட்டவர்கள் யார் என்று இன்னும் தேடிக்கொண்டிருப்பவர்கள் அவர்களுக்கு என்ன ஆனது என்பதை எப்போது தேட ஆரம்பிக்கப் போகிறார்கள்.
இந்த ஆணைக்குழுக்களாலும் அலுவலகங்களாலும் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. அப்படியொன்று நடக்குமாக இருந்தால் அது என்றோ நடந்திருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.