கிழக்கு முனையம் இந்திய அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படாது என்கின்றது அரசாங்கம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்துள்ளது.

இவ்வாறு துறைமுக தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபையின் செலவில் அதற்கு சொந்தமான முனையமாக மாற்றுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுகத்தின் முனையத்தில் உள்ள கிரேன்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்திற்கு 270 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒன்றரை ஆண்டுகளில் கிரேன்கள் கட்டி முடிக்கப்படும் என்றும் மேலும் 39 மில்லியன் டொலர்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பொறுப்பு என நிமல் சிறிபால டி சில்வா குற்றம் சாட்டினார்.

சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் கடனை மறுசீரமைப்பதற்கும் சரவதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுமாறு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தான் தெரிவித்ததாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.