கீரிமலை ஆதிசிவன் கோவில், சடையம்மா மடம், கதிரை வேலன் கோவில்களின் நிலை என்ன என அகில இலங்கை இந்துமா மன்ற உப தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை சைவமக்களின் மிகத் தொன்மை வாய்ந்த வரலாற்றிடம் கீரிமலை. இப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான மலை போன்ற ஒரு பாறைப்பகுதியில் ஆதிச்சிவன் கோவில் அமைந்திருந்தது.
அச்சிவன் கோவில் தற்போது இல்லை. இல்லை என்று அங்கு போய் வந்த அன்பர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள். மேலும் பெருமைமிக்க பெண் சித்தரான சடையம்மா அவர்களின் சமாதி கோவில் மடம் அதற்கருகிலிருந்த சங்கர சுப்பையர் சுவாமிகளின் சமாதி, கதிரை வேலன் கோவில் இவற்றை காணவில்லை என்ற செய்தி சைவ மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்துள்ளது.
சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்பு ஆலயத்தை தரிசிக்கலாம் என்று சென்ற மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது. இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதிலளிக்க வேண்டும்.தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாலயங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அழிக்கப்பட்ட கோவில்கள் இருந்த இடத்தை சைவ மக்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
மீண்டும் அந்த இடங்களில் சைவமக்கள் கோவில்களைக் கட்டுவதற்கான அனுமதியை உடன் வழங்க வேண்டும். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பாக உடன் குரல் கொடுக்க வேண்டும்.
வடக்கு மாகாண ஆளுனர் பொதுமக்கள் தங்கள் நிலங்களை பார்வையிடுவதற்கும் அங்கு எஞ்சியுள்ள கோவில்களை தரிசிப்பதற்கும் உடன் ஒழுங்கு செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.