குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) யாழ். நெடுந்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது.
குமுதினிப் படகுப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்காக இன்று காலை 7.45 மணிக்கு நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
நெடுந்தீவு இறங்கு துறையில் அமைந்துள்ள குமுதினி படகுப் படுகொலை நினைவாலயத்தில் இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்தவர்களிற்கு சுடரேற்றி மலரஞ்சலி செய்யப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு பயணித்துக் கொண்டிருந்த வேளை இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
படுகொலை செய்யப்பட்ட மக்கள் ஞாபகார்த்தமாக சூழகம் அமைப்பினால் வழங்கப்பட்ட மரங்கள் நெடுந்தீவில் நாட்டப்பட்டதுடன் பொதுமக்களுக்கு மரங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.