தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுமாறு ரெலோ மற்றும் புளொட் ஆகியன கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் எழுத்து மூலமாக கடிதமொன்றை புதன்கிழமை (16) அனுப்பி வைத்துள்ளனர்.
அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூடுவதற்காக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பினும் அது தொடர்ச்சியாக பல காலம் நடைபெறாமலே இருப்பது கவலைக்குரியது.
இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் அங்கத்துவ கட்சிகளுக்கு இடையிலான கருத்து பரிமாற்றங்கள் சீர்குலைந்துள்ளது. கருத்து வேறுபாடுகள் தோன்றுவதனால் புரிந்துணர்வு அற்ற சூழலே காணப்படுகிறது.
இதைத் தவிர அங்கத்துவக் கட்சிகளுக்கு உள்ளே ஏற்படுகின்ற பூசல்களும் முரண்பாடுகளும் அக்கட்சிகளை மாத்திரம் பாதிக்காது ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பாதகமாக உருவாகி வருகிறது.
இந்தச் சூழ்நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாரிய நம்பிக்கை வைத்துள்ள தமிழ் மக்களினுடைய எண்ணங்களில் சந்தேகமும் குழப்பமும் தோன்றுவதை அவதானிக்க முடிகிறது. வெளிப்படையாகவே மக்கள் கூட்டமைப்பில் நிலவும் குழப்ப சூழ்நிலைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பகிரங்கமாகக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையை தொடர விடாமல் தடுத்து நிறுத்துவதும், பாரிய தேசிய இயக்கத்தை தொடர்ந்து சிக்கலுக்கு உட்படுத்துகின்ற நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வரவும் உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதானிகளை கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை கூட்டுவது அவசியம் என்று நாம் கருதுகிறோம்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மிக விரைவில் அதற்கான கால நேரத்தை அறியத்தருமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.