‘கோ ஹோம் கோட்டா’ என்பதை பெரும்பாலானோர் தற்போது மறந்து விட்டார்கள் என, இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரின்போது விசேட கூற்றை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் பேசுகையில், “பொருளாதார நெருக்கடியினால் நடுத்தர மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். அறிவுள்ளோர் நாட்டை விட்டு வெளியேறும் வீதம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறது. திறமைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அரசாங்கம் நடைமுறைக்கு பொருத்தமான முன்னேற்ற திட்டங்களை செயற்படுத்தவில்லை.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிர்மான கட்டுமானத்துறையினர், சிறு மற்றும் நடுத்தர தொழிற் துறையினர் வங்கி கடன்களினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
வங்கி கடனை மீள் செலுத்துவதற்கு மேலும் ஓராண்டு கால அவகாசம் வழங்கல், வட்டி அறவிடலை இடைநிறுத்தல், கடன் தவணை மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டு பாரிய டாலர் நெருக்கடியினை நாடு எதிர்கொண்டுள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி அத்தியாவசிய பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட வகையில் இடைநிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.