ரணிலின் அரசியல் சதுரங்கம் ?

யதீந்திரா

சில வாரங்கள் வரையில், ரணிலின் அரசியல் வாழ்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதான ஒரு அனுமானமே பரவலாக இருந்தது. ஆனால், ராஜபக்சக்களின் வீழ்ச்சி, ரணில் விக்கிரமசிங்கவை ஆறாவது பிரதமராக்கியிருக்கின்றது. இதன் மூலம், ரணில் – தனது அரசியல் எதிர்காலம் தொடர்பான அனைத்து ஆருடங்களையும் ஒரு ஆசனத்தின் மூலம் தோற்கடித்திருக்கின்றார். ரணிலின் பதவியேற்பு தொடர்பில், பலவாறான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. அவரது நியமனம் ஜனநாயகரீதியானதல்ல – அது முறையானதல்ல என்று கூறுவோர் உண்டு. ரணில் விக்கிரமசிங்கவின் நியமனத்தை, ஜனநாயகரீதியில் பார்க்க முடியுமென்று நான் கருதவில்லை. இது அடிப்படையில் நெருக்கடி நிலையை கையாளுவதற்கான ஒரு தந்திரோபாய நகர்வு. தந்திரோபாய நகர்வுகளுக்கும் ஜனநாயகத்திற்கும் என்ன தொடர்பு? இதில் வெளித்தெரியாத டீல்கள் இருக்கலாம். அதிகார அரசியலில் டில்கள் தவிர்க்க முடியாதவை அதையும் விட்டுவிடுவோம். இவ்வாறான எதிர் கருத்துக்களுக்கப்பால், இன்றைய சூழலில் ரணில் விக்கிரமசிங்க நிலைமைகளை சமாளிக்கக் கூடிய ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. தென்னிலங்கையில் மட்டுமல்ல, தமிழர்கள் மத்தியிலும் அவ்வாறான அப்பிராயம் பரவலாக உண்டு.

ரணில் ஒரு நரியென்னும் அப்பிராயம் தமிழ் தேசியவாதிகள் மத்தியிலுண்டு. நான் தமிழ் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த போது, படித்த தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கவை நரியென்று கூறுவதை பரவலாக கேட்டிருக்கின்றேன். அதாவது, அவர் ஒரு தந்திரசாலி. அவரிடம் கவனமாக இருக்க வேண்டுமென்னும் அச்சத்திலிருந்தே, மேற்படி பார்வை உருவாகியது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொடர்பிலும் தமிழ் அரசியலாளர்கள் மத்தியில் இவ்வாறான பார்வையே உண்டு. ஜெயவர்த்தன வழிவந்த ஒருவர் என்பதால்தான், ரணிலையும் பலர் அவ்வாறு உச்சரிக்கின்றனர். இங்கு நரியென்னும் அடைமொழி, அரசியல் அர்தத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது. ஒரு தலைவன் என்பவன், நரியாகவும் இருக்க வேண்டுமென்பது, மாக்கியவல்லியின் அறிவுரை. மாக்கியவல்லியின் பார்வையில், ஒரு தலைவர் என்பவர் சிங்கமாகவும் நரியாகவும் இருக்க வேண்டும். ரணில் மாக்கியவல்லியின் கூற்றுக்கு இணையான ஒரு அரசியல்வாதி. ரணிலின் மீதுள்ள அச்சத்தின் காரணமாகவே, பிரபாகரன், தேர்தல் பகிஸ்கரிப்பின் மூலம், அவரை தோற்கடிக்கும் வியூகத்தை வகுத்திருந்தார்.

2005 தேர்தலில், தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களித்திருந்தால், நிச்சயம், ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பார். ரணிலின் புத்திசாதுர்யம்மிக்க வியூகங்களை எதிர்கொள்வதை விடவும், கடும்போக்குவாதியொருவரின் யுத்தத்தை எதிர்கொள்வதையே, பிரபாகரன் விரும்பினார். இறுதியில் அவரது தெரிவு அவருக்கே அழிவானது. தங்களின் வெல்ல முடியாத அரசியல் எதிரிகளை, தற்கொலை தாக்குதலின்
மூலம் வீழ்த்துவே, புலிகளின் வழமையான அரசியல் தந்திரோபாயமாகும். ரணில் விக்கிரமசிங்கவின் விடயத்தில், வழமைக்கு மாறாக, தமிழர்களின் வாக்குகளை கொண்டே, ரணிலின் அரசியல் எதிர்காலத்தை பிரபாகரன் தோற்கடித்தார்.

இப்போது அவர் பிரதமராக வந்திருக்கும் பின்னணி தொடர்பான, விமர்சனங்களுக்கு அப்பால், இன்றைய சூழலை கையாளுவதற்கு ரணிலை விடவும் வேறொரு பொருத்தமான நபர் இல்லையென்பதை பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். 2019 நாடாளுமன்ற தேர்தலில், படுமோசமான தோல்வியை சந்தித்திருந்த ரணில் விக்கிரமசிங்க, ஒரேயொரு ஆசனத்தின் மூலம் நாட்டின் பிரதமராக வந்திருக்கின்றார் என்றால், அது அவரது புத்திக் கூர்மையன்றி, வேறொன்றுமில்லை. ராஜபக்சக்கள் மிகவும் திட்டமிட்டு இதனை செய்திருக்கின்றனர் என்றும் சிலர் கூறுகின்றனர் – இதனை நான் சரியான கணிப்பாக பார்க்கவில்லை. ஏனெனில், ஜனாதிபதி கோட்டபாயவின் முதல் தெரிவு, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவாகவே இருந்தது. ஆனால் சந்தர்பத்தை சரியாக கையாளுவதில் துரிதமாகவும் புத்திசாலித்தனமாகவும் பிரேமதாச செயற்பட்டிருக்கவில்லை. இந்த இடைவெளியைத்தான் ரணில் பயன்படுத்திக் கொண்டார்.

இன்றைய சூழலில் மக்களின் முதன்மையான பிரச்சினை பொருளாதார சுமைதான். இதனை சரிசெய்வதில் ரணில் வெற்றிபெறுவாராக இருந்தால், அவர் மீளவும் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள ஒரு தலைவராக வந்துவிடலாம். ஆனால் ஆட்சி மாற்றத்தின் போது, ரணிலின் மீது வைத்திருந்த நம்பிக்கையை பாதுகாப்பதில் அவர் தோல்வியடைந்திருந்தார். ரணில்-மைத்திரி ஆட்சியின் தவறுகளும் ராஜபக்சக்களின் மீளெழுச்சிக்கு ஒரு பிரதான காரணமாகும். ஆட்சி மாற்றத்தின் தோல்வியே, இறுதியில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியின் சிதைவுக்கும் வழிவகுத்தது. எந்த ராஜபக்சக்களை வீழ்த்துவதற்காக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதோ, இறுதியில், ராஜபக்சக்களை பலப்படுத்துவதற்கே அது பயன்பட்டது. அந்த வகையில், ஆட்சி மாற்றத்தை தக்கவைப்பதில் ரணிலால் வெற்றிபெற முடியவில்லை.

ரணில் இன்றைய நெருக்கடி நிலையையை கையாளக் கூடியவரென்று கூறுவதற்கு பின்னாலிருக்கும் பிரதான காரணம், அவர் மேற்குலகிற்கு சார்பானவர் என்னும் பார்வையாகும். இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளில், அமெரிக்கா அதிக ஈடுபாடு காட்டியிருந்தது. இதற்கு, அமெரிக்காவின் அப்போதைய உதவி ராஜாங்கச் செயலர், ரிட்சர்ட் ஆமிட்ரேஜின் பிரத்தியோக ஈடுபாடும் ஒரு பிரதான காரணமாகும். இது பற்றி, அப்போது, இலங்கைக்கான, அமெரிக்க தூதுவராகவிருந்த ஜிப்ரி லுன்ஸ்டட் இவ்வாறு விபரிக்கின்றார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டுமென்பதில் ரிச்சர்ட் ஆமிட்ரேஜ் பிரத்தியேக ஈடுபாடு காண்பித்திருந்தார். ஜக்கிய தேசியக் கட்சி, அடிப்படையில் மேற்குசார்பான கட்சி. உலகளாவிய கொன்சவர்டிவ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில், ஜக்கிய தேசியக் கட்சியும் ஒரு அங்கத்துவ கட்சி. இந்த கூட்டமைப்பின் இணை நிறுவனர்களில், அப்போது அமெரிக்காவின் ஜனாபதியாக இருந்த, ஜோர்ஜ். எச்.டயிள்யு.புஸ்சும் ஒருவராவார். அதே வேளை, அமெரிக்காவின் குடியரசு கட்சிக்கும் ஜக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான நீண்டகால நெருக்கமிருந்தது. இப்படியான காரணங்களால், ரணில் தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த வேண்டுமென்பதில் ஆமிட்ரேஜ் பிரத்தியேக ஈடுபாடு காண்பித்திருந்தார். அன்றைய சூழலில், அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள வட்டாரத்தில், இலங்கைக்கான அதிகாரியென்று அழைக்கப்படுமளவிற்கு, ஆமிட்ரேஜ், இலங்கை விடயங்களில் பிரத்தியே ஈடுபாட்டை காண்பித்திருந்தார். ஆனால் ஆமிட்ரேஜின் பிரத்தியேக நகர்வையே விடுதலைப் புலிகள் தோற்கடித்திருந்தனர். மேற்குலகு விடுதலைப் புலிகளுக்கு எதிராக முற்றாக திரும்பிய இடமும் இதுதான்.

ரணில் விக்கிரமசிங்க மிகவும் புத்திக் கூர்மையுள்ளவராக இருந்த போதிலும் கூட, அவரால் நிறைவேற்றதிகார கதிரையை ஒரு முறை கூட தொடமுடியவில்லை. 2005இல் விடுதலைப் புலிகளால் அந்த வாய்ப்பை இழந்து போனார். 2015இல், ஆட்சி மாற்றத்திற்கான பரந்த கூட்டணியொன்று உருவாக்ககப்பட்ட போதிலும் கூட, ரணிலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவிற்கு பின்னாலிருந்தே ரணில் செயற்பட வேண்டியேற்பட்டது. ஆட்சிமாற்றம், ரணில் விக்கிரமசிங்கவை மீளவும் அதிகாரமுள்ள பிரதமராக முன்னிறுத்திய போதிலும் கூட, ரணில்-மைத்திரி உள்-மோதல்களால், அவர், மீளவும் மக்கள் மத்தியில் அன்னியப்படக் கூடிய சூழலே உருவாகியது. சஜித் பிரேமதாசவின் பிளவால், இறுதியில் ஜக்கிய தேசியக் கட்சி முற்றிலுமாக சிதைந்தது. கிட்டத்தட்ட ரணில் விக்கிரமசிங்க காணாமல் போய்விட்டார் என்னும் நிலையிலிருந்துதான், அவர் தற்போது, மீளவும் பிரதமராகியிருக்கின்றார்.

எரிக் சொல்கெய்ம், சொல்வது போன்று, ரணில் விக்கிரமசிங்க ஒரு சிறந்த புத்திஜீவி ஆனால் தெருச் சண்டைக்காரரல்ல – அவரிடம் விரிவான பொருளாதார திட்டமிருந்தது – சிங்கப்பூர், தாய்வான் போன்று, இலங்கையையும் மாற்ற வேண்டுமென்று அவர் விரும்பினார். ஆனால், சிங்கள தெருச்சண்டித்தனத்திற்கு முன்னால் ரணிலின் புத்திக் கூர்மை வெற்றிபெறவில்லை. ரணிலால் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக ஒரு போதுமே நிமிரமுடியவில்லை. ஆனாலும் தனது புத்திக் கூர்மைகொண்டு, தனக்கான ஆடுகளத்தை அவர் எப்போதுமே உருவாக்கிக் கொள்கின்றார். தெருச்சண்டியர்களான ராஜபக்சக்கள் தேற்றுப்போயிருக்கும் ஆடுகளத்தில், சிங்கமாகவும் நரியாகவும் மீண்டும் ரணில், களமிறங்கியிருக்கின்றார்.

ரணில் இதற்கு முன்னர் ஆடிய அரசியல் களங்களுக்கும் இதற்கும் அடிப்படையான வேறுபாடுண்டு. மீட்பர்கள் இல்லாத இடைவெளியில், தன்னால் மீட்க முடியுமென்னும் நம்பிக்கையோடு களமிறங்கியிருக்கின்றார். இது மிகவும் சிக்கலான சவால். இந்தச் சவாலில் ரணில் வெற்றிபெற்றால், அவர், மக்கள் மத்தியில் மறக்கமுடியாதவொரு தலைவராவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு விடயம் உண்மை. ரணில் இந்த ஆட்டத்தில் தோல்வியடையக் கூடாது. ஒரு வேளை ரணில் தோல்வியடைந்தால், நாடு மீள முடியாத நெருக்கடிக்குள் வீழ்வது நிச்சயம். மோசமான வனமுறையொன்றும் வெளிக்கிளம்பலாம்.

வரலாறு பல ஆச்சரியங்களை மறைத்து வைத்திருக்கும் ஆசானாகும். 2005இல், ரணிலின் தோல்விக்கு தமிழர்கள் காரணமானபோது, அது விடுதலைப் புலிகளுக்கும்; தமிழ் மக்களுக்கும் பேரழிவை கொடுத்தது. இப்போது சிங்களவர்கள் ரணிலை தோற்கடித்தால், சிங்களவர்கள் பேரழிவை சந்திக்க நேரிடும். இப்போது ரணில் தமிழர்களுக்கு தேவையோ இல்லையோ ஆனால் நிச்சயம் சிங்களவர்களுக்கு தேவை. எனது கருத்தில் அவர் தமிழர்களுக்கும் தேவைதான்.