சட்டங்கள் திருத்தப்பட்டதன் பின்னர் பழைய முறைப்படி மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த முடியுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக இருந்தால், அதற்காக நீண்ட காலத்தை செலவழிக்க நேரிடுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணயத்தின் பின்னர், பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று புதிய முறைமையை திட்டமிட வேண்டியேற்படுவதால் இந்த நிலைமை உருவாகுமென அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டின் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு முழுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் திட்டமிடப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விகிதாசார முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக கிட்டத்தட்ட 4,000 மில்லியன் ரூபா நிதி செலவாகுமென அவர் கூறியுள்ளார்.
கொரோனா பாதுகாப்பு முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்காக செலவிடப்படும் நிதி அதிகரிக்கலாம் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேர்தல் முறைமை தொடர்பில் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற செயற்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.