பேராயர் மல்கம் ரஞ்சித் , எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் அடிப்படை உரிமை மீறல் மனு

கெரவலப்பிட்டிய யுகதனவி அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகள் அமெரிக்காவின் நியூ ஃபோட்ரஸ் நிறுவனத்திற்கு வழங்குவதை ஆட்சேபித்தும் குறித்த நிறுவனத்திடம் திரவ வாயு விநியோக ஒப்பந்தம் வழங்கப்படுவதை தடுக்கும் வகையிலும் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவை, அமைச்சரவை செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 54 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் வரிசையில் அமெரிக்காவின் நியூ ஃபோட்ரஸ் நிறுவனமும் அடங்குகின்றது.

வழக்கறிஞர் மஞ்சுள பாலசூரிய மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவை அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், நியூ போட்ரஸ் நிறுவனம், சட்டமா அதிபர் உட்பட 54 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவது தங்களது மற்றும் நாட்டு மக்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதார்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த ஒப்பந்தம் தொடர்பாக செப்டம்பர் 6 ஆம் திகதி அமைச்சரவையில் எட்டப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை யுகதனவி மின்நிலையத்தில் உள்ள பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவதைத் தடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமாறும் கோரியுள்ளனர்.