இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ‘சனல் ஐ’ அலைவரிசையை ‘லைக்கா குழுமத்திற்கு’ (LYCA) குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவை நிராகரித்துள்ளது.
அமைச்சரவை நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.
வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சபையில் சமர்ப்பித்துள்ளார்.
ஜூலை மாத இறுதியில் லைக்கா குழுமத்திற்கு ‘சனல் ஐ’ வழங்க இரு தரப்பினரும் இணங்கியிருந்த போதிலும், ரூபவாஹினியின் பணிப்பாளர் சபை அல்லது ஊடக அமைச்சின் முன் அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது.
எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் கடுமையாக விமர்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சனல் ஐ தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதால் தனியார் முதலீட்டாளருக்கு மாற்றுவதற்கு முன்னாள் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை முன்மொழிந்திருந்தது. அதன்படி, இது தொடர்பான டெண்டர் அறிவிப்பு பெப்ரவரி 03, 2023 அன்று வெளியிடப்பட்டது, விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வது பெப்ரவரி 17 அன்று முடிவடைந்தது. உரிய திகதியில், நாட்டிலுள்ள 2 நன்கு அறியப்பட்ட தகவல் தொடர்பு முகவர் நிறுவனங்கள் மட்டுமே அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தன.
ஆனால், ஊடகத்துறை அமைச்சரால் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் அண்மையில் ‘சனல் ஐ’ சனலை இரண்டு நிறுவனங்களுக்கும் தெரிவிக்காமல் ‘லைக்கா’ நிறுவனத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்திருந்தார்.