பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 34 இலட்சம் குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரணத்தை கோரியுள்ளன.
வரி அறவிடல் ஊடாகவே நிவாரணம் வழங்க முடியும்.சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி எதிர்வரும் ஓரிரு மாதங்களில் மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
வரி அறவிடல், பொருளாதார நிலைமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் கடந்த ஆறு மாத காலத்தில் முன்னெடுத்த கடுமையான தீர்மானங்கள் சாதகமான பெறுபேற்றை அளித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை உடன் இம்மாத நடுப்பகுதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.
கடுமையான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். கடுமையான தீர்மானங்களை எடுக்காமல் இருந்திருந்தால் நாட்டில் கடந்த வருடத்தில் ஏப்ரல், மே ஆகிய காலப்பகுதியில் இருந்த நிலை தற்போது பன்மடங்கு அதிகரித்து பாரிய விளைவை நாடு எதிர்கொண்டிருக்கும்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 43 இலட்ச குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரண உதவியை கோரியுள்ளார்கள்.இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.வரி அறவிடல் ஊடாகவே நிவாரணம் வழங்க முடியும்.
பொருளாதார மட்டத்தில் உயர் நிலையில் உள்ள 10 சதவீதமானோரிடமிருந்து உதவிகளை பெற்று நடுத்தர அல்லது ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க புதிய வரிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
அரச வருமானத்தை 14 சதவீதமாக தக்கவைத்துக் கொள்ள பெறுமதி சேர் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி இன்னும் ஓரிரு மாதங்களில் மீள்பரிசீலனை செய்யப்படும்.சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி பெற்றுக் கொள்ளப்பட்டவுடன் ஒருசில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.