சரத்வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து வடக்கு – கிழக்கு நீதித்துறையினர் பணிப்பகிஷ்கரிப்பு

யாழ்ப்பாணம் 

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (11) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

சரத் வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காது இருக்க தீர்மானித்ததாக யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பா.தவபாலன் தெரிவித்தார்.

சரத் வீரசேகரவின் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை (11) முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் அடையாள கண்டனப் பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கண்டனப் பேரணியில் எமது சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நீதிபதிகளை எச்சரித்து வெளியிட்டுள்ள கருத்தைக் கண்டித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் செவ்வாய்க்கிழமை (11) பணிப்பஷ்கரிப்பில் ஈடுபட்டு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால் கண்டன ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த தில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நீதிபதிகளை எச்சரித்து தெரிவித்த கருத்தை கண்டித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி போ.பிறேமநாத் பணிப்பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (11) காலை 9 மணிக்கு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்னால் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சட்டத்தரணிகள், மற்றும் மட்டு நீதிமன்ற கட்டிடத் தொகுதி சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து பணிப்பஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன் நீதித்துறை சுதந்திரத்திற்காய் குரல்கொடுப்போம், நீதித்துறை சுதந்திரத்தை உறுதி செய், நீதித்துறைக்கு அரசியல் தலையீடு வேண்டாம்.

நீதித்துறையின் சுதந்திரமே ஜனநாயகத்தின் தூண் ஆகும், நீதித்துறையில் இனவாதத்தை கலக்காதே, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் கண்டன ஆர்பட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (11) பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து, முல்லைத்தீவு  மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அம்பாறை

அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (11) ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் சுலோகங்களில் பல்வேறு வாசகங்களை எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் தமிழ் பௌத்த வழிபாட்டு எச்சங்களின் மீது, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சிங்கள பௌத்த கட்டுமானங்களை பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அண்மையில் சென்றிருந்தார்.

அப்போது தனது குழுவினருடன் அங்கு வந்திருந்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேக, தேவையில்லாமல் மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டினார்.

அரசியல்வாதிகள் நீதிமன்ற விசாரணையில் மூக்கை நுழைக்கக்கூடாது என எச்சரித்து வீரசேகரவை அங்கிருந்து அகற்றினார்.

இதனால் கொதிப்படைந்த வீரசேகர அண்மையில் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களிற்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்க கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சாவகச்சேரி

யாழ். சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாது செவ்வாய்க்கிழமை (11) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (11) வழக்கு விசாரணைகள் பிறிதொரு நாள் தவணையிடப்பட்டன.

தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மன்னார்

மன்னார் சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (11) பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வின் கருத்தை கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

செவ்வாய்க்கிழமை (11) காலை மன்னார் நீதிமன்றத்திற்கு சமுகமளித்த சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததோடு, முல்லைத்தீவில் இடம் பெறும் போராட்டத்திலும் கலந்து கொள்ள முல்லைத்தீவிற்கு சென்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினத்துக்கான வழக்கு விசாரணைகள் பிரிதொரு தினத்திற்கு தவணையிடப்பட்டது.