கொரோனாவினால் மரணிப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்வது சாத்தியப்படாது எனத் தெரிந்துகொண்டே அரசாங்கம் இரணைதீவில் அடக்கம் செய்யும் நடவடிக்கையை திட்டமிட்டு மேற்கொண்டுள்ளது. கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கி இருக்கும் அனுமதி முஸ்லிம் நாடுகளை ஏமாற்றி ஜெனீவாவில் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
கொரோனாவினால் மரணிப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில்,
கொரோனாவால் மரணிப்பவர்களை உலகம் பூராகவும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அடக்கம் செய்யும் நிலையில் இலங்கை மாத்திரம் அதற்கு அனுமதி வழங்காமல் முஸ்லிம்களைப் பழிவாங்கும் நோக்கில் இழுத்தடித்துக் கொண்டிருந்தது. தற்போது ஜெனிவா மனித உரிமை மாநாடு ஆரம்பித்ததுடன் சர்வதேச நாடுகள் இலங்கையின் பலவந்த ஜனாஸா எரிப்புக்கு எதிராக கடும் அழுத்தங்களை பிரயோகித்து வந்தன. அதேநேரம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விஜயமும் இடம்பெற்ற நிலையில், கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டது.
சர்வதேச நாடுகளின் அழுத்தம் மற்றும் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அடக்கம் செய்ய அனுமதி வழங்கிவிட்டு, அடக்கம் செய்ய இரணை தீவை தெரிவு செய்திருக்கின்றது. கொழும்பில் இருந்து இரணை தீவுக்கு போய் வருவதற்கு 600 கிலோ மீற்றர் தூரம். சடலம் ஒன்றை எடுத்துக்கொண்டு இவ்வளவு தூரம் செல்வதென்பது சாத்தியமில்லாத ஒன்று.
அடுத்ததாக கொரோனா வைரஸ் நீரில் கலக்கும் சாத்தியம் இருப்பதாகத் தெரிவித்தே அரசாங்கத்தின் தொழில்நுட்பக் குழு அடக்கம் செய்ய அனுமதி வழங்காமல் இருந்தது. தற்போது அடக்கம் செய்ய அனுமதி அளித்திருக்கும் இரணைதீவு நிலத்தடி நீருக்கு மிகவும் நெருக்கமான பூமிப் பிரதேசமாகும்.
அப்படியானால் இதுவரை காலமும் அடக்கம் செய்ய அனுமதி வழங்காமல் இருந்தது, வெறும் அரசியல் அடிப்படையில் முஸ்லிம்களை பழிவாங்கும் நோக்கில் என்பது தெளிவாகின்றது. அத்துடன் கொரோனா வைரஸ் நீரில் கலந்து பரவுவதில்லை என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு தெளிவாகத் தெரிவித்திருந்தார். அதேபோன்று கொரோனா மரணம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஜெனிபர் பெரேராவின் குழுவின் அறிக்கையில், கொரோனாவால் மரணிப்பவர்களை பொது மயானங்களில் அடக்கம் செய்வதில் பிரச்சினை இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் சர்வதேசத்துக்கு காட்டும் வகையிலும் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலுமே கொரோனா வால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருப்பது தெளிவா கின்றது. அதனால் அரசாங்கம் தொடர்ந்தும் இந்த ஏமாற்று நாடகத்தை மேற்கொள்ளாமல் உலக நாடுகள் கடைப்பிடிக்கும் முறையில் கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றார்.