நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத நாட்டில் எப்படி நீதியை பெற்றுக்கொள்ள முடியும்?
கருணை, காருண்யம் போதித்த புத்தபகவான், இன்று ஒரு ஆக்கிரமிப்பு கருவியாக பயன்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றில் கருத்து தெரிவித்தார்.
முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் புத்தபகவானின் சிலை நிறுவப்பட்ட சம்பவம் மற்றும் விஸ்வமடு பகுதியில் படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சிறீதரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு சரத் வீரசேகர பதிலளித்து பேசிய நிலையில், அதற்கு எதிர் கருத்து வெளியிட்ட போதே சிறீதரன் இந்த விமர்சனத்தை வெளியிட்டார்.
இலங்கையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் தனித்தனி சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் போராடும்போது, அவர்களை தமது பிள்ளைகளாக பார்க்கும் அரசாங்கம், தமிழர்களை மாற்று முகமாக பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.