கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்களை அரசாங்கம் அபகரித்து, அம்மக்களை விவசாயம் செய்யாமல் தடை செய்து, இனவாத அதிகாரிகளால் விரட்டியடிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வந்தும் எந்தத் தீர்வும் கிடைக்க வில்லை என எழுத்தாளரும், பன்நூல் ஆசிரியருமான கவிஞர் கால்தீன் குற்றம் சாட்டுகின்றார்.
அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர். அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது, நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில், ஜனாதிபதி இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது மிகுந்த வேதனையளிக்கின்றது.
மூன்று தசாப்தங்களாக விவசாயம் செய்து வந்த காணிகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நீதி இல்லாமல் நடு வீதியில் நிற்கிறார்கள்.
இதற்கான தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்ள தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து வடக்குக் கிழக்கில் அதிகாரப் பகிர்வொன்றினைப் பெற்றுக் கொண்டு நமது மக்களின் துன்பங்களைப் போக்க முயற்சிக்க வேண்டும் என்றும் வேண்டுகோளொன்றையும் இதன்போது முன்வைத்தார்.