சீனாவிற்கு அதிகாரத்தை கொடுக்க நினைப்பவர்கள் தமிழர்களுக்கு வழங்கியிருந்தால் இரத்த ஆறு ஓடியிருக்காது – ரெலோ தலைவர் செல்வம்

தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டிய அதிகாரங்களை பகிர்ந்தளித்திருந்தால் இலங்கையில் இரத்த ஆறு ஓடியிருப்பதை தடுத்திருக்க முடியும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், துறைமுக நகர சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்புக்கு முரண் என நீதிமன்றம் அறிவித்திருக்காவிட்டால், நாட்டுக்குள் வேறு நாட்டுக்குரிய விடயங்கள் இடம்பெற்றிருக்கும். அந்தவகையிலேயே போட்சிட்டி நகர திட்ட உருவாக்கப்பட்டிருக்கின்றது. அன்று எமது பெரியார்கள் சமஷ்டியை கோரி அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்கள் நய்யப்புடைக்கப்பட்டு, இந்த சபையில் இரத்தம் சொட்டச்சொட்ட தங்களது கருத்துக்களை தெரிவித்தபோது, அந்த அகிம்சைக்கூட மறுக்கப்பட்டது. அதேபோன்று ஆயுத போராட்டம் ஊடாக எமது இனத்தின் விடுதலையை பெறவேண்டும் என சொல்லுகின்றபோது, பயங்கரவாதிகள் பிரிவினை வாதிகள் என எமது மக்களை தெரிவித்து வந்தனர்.

அத்துடன் தற்போது எமது பிரதேசங்களில் எமது விவசாய நிலங்கள் மகாவலி திட்டம் ஊடாக மத்திய அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கின்றது. தொல்பொருள் என்ற பெயரில் செயற்பட்டு எமது பிரதேசத்தில் புத்த விகாரைகளை அமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் பெயரில் இன்று பலர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆனால் தற்போது பேசுபொருளாக இருக்கும் போட்சிட்டி என்பது, ஒரு நாட்டுக்குரிய சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கின்றதாக அமைந்திருக்கின்றது. அப்படியானால் ஏன் அதிகார பரவலாக்கத்தை தரவேண்டும் என்கின்ற எமது தமிழ் இனத்தை பிரித்துப்பார்க்கின்ற, அவர்கள் பயங்கரவாதிகள் என சொல்லும் வகையில் உங்களது சிந்தனைகள் இருக்கின்றன. அத்துடன் மாகாண சபை முறைமையை இல்லாமலாக்கும் திட்டத்தையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. மாகாணசபை சட்டத்தில் இருக்கும் பொலிஸ், நில அதிகாரத்தை கேட்கும்போது பிரிவினைவாதிகள் என எங்களை தெரிவிக்கின்றனர். ஆனால் போட்சிட்டிக்கு ஒரு நாட்டுக்குரிய அதிகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

அத்துடன் அரசாங்கத்தின் துறைமுக சட்டமூலத்தை சிங்கள மக்களும் எதிர்க்கின்றனர்.அதனால் இந்த நாட்டுக்குள் வேறு ஒரு நாட்டுக்குரிய அதிகாரம் வழங்கும் இந்த சட்டமூலத்தை நாங்களும் எதிர்க்கின்றோம் என்றார்.