சீனி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த வரியை 50 ரூபாவிலிருந்து 25 சதமாக குறைத்து இலங்கை அரசுக்கு கிடைக்க வேண்டிய 1,600 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரி வருமானத்தை இழக்கச் செய்து பாரிய நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு கிலோ கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட பண்ட வரி 25 சதமாக குறைக்கப்பட்டது.
இந்த வரிக்குறைப்பிற்கு 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட பண்ட வரி சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு நிதி அமைச்சின் அதிகாரிகளிடம் விசாரணை நடாத்திய போது, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபயவின் ஆலோசனைக்கமைய வரிக் குறைப்பு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குறித்த வரிக் குறைப்பு அப்போதைய வர்த்தகத்துறை அமைச்சரான தனக்கே தெரியாமல் செய்யப்பட்டது எனவும், அரச அதிகாரிகள் சிலர் அது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றில் குரிப்பிட்டிருந்தார்.
இந் நிலையில், குறித்த வரி மோசடி தொடர்பில் விடயங்களை தெரிந்தோரின் வாக்கு மூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஓர் அங்கமாக கடந்த 19ஆம் திகதி திங்களன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவில் ஆஜராக அமைச்சர் பந்துலவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அன்றைய தினம் ஆஜராகாத அவர் பிரிதொரு திகதியை கோரியுள்ளார்.
இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி நடந்த அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு (கோபா) கூட்டத்தின் பின்னர் அரசின் உத்தரவிற்கமைய, நிதி,பொருளாதார ஸ்திரம் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன செய்த முறைப்பாட்டை மையப்படுத்தி, பாரிய அளவில் வரி குறைப்பின் ஊடாக கிடைக்கப்பெற்ற பிரதிபலன் நுகர்வோரை சென்றடையாது வேறு தரப்பொன்று கொள்ளை இலாபம் ஈட்டியுள்ளதா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதிக்குற்ற விசாரணை பிரிவு முதலாம் இலக்க விசாரணை அறை ஊடாகவும் விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.