சுதந்திர தினக் கொண்டாட்டச் செலவுகள் எதிர்காலத்திற்கான முதலீடு – ஜனாதிபதி

சுதந்திர தினக் கொண்டாட்டச் செலவுகள் எதிர்காலத்திற்கான முதலீடாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் அதிகளவு செலவு செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று சுதந்திரத்திற்குப் பின்னர் எமக்கு 75 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. சுதந்திரம் அடைந்து 100 வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் நாட்டின் மறுசீரமைப்புக்கு அவசியமான பல நிறுவனங்களை உருவாக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய வரலாற்று தொடர்பிலான  நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றை மறந்து விட்டோம் என்பதே தங்கள் மீது  இப்போதுள்ள பாரிய குற்றச்சாட்டு என தெரிவித்துள்ள ஜனாதிபதி, அப்படியானால் அவ்வாறானதொரு நிறுவனத்தை ஆரம்பித்தே ஆக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், பொருளியல் மற்றும் வர்த்தக நிறுவனமொன்றை நிறுவவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.