சுற்றுலா வீசாக்களில் வெளிநாடுகளுக்கு சென்று, அங்கு தொழில் தேடிக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகின்றன.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சு மற்றும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதித்துறை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுலா வீசாக்கள் ஊடாகச் சென்று வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தொடர்பில் கடந்த சில தினங்களாகவே அதிகளவான தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் எம்மிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அன்றைய தினமே இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
மேலும் சில பட்டியல்கள் காணப்படுகின்றன. அவற்றிலுள்ளவர்களும் விரைவில் கைது செய்யப்பட்டு , சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா வீசாக்கள் வழங்கப்படுகின்றமை சுற்றுலா செல்வதற்காகவேயாகும்.
ஆனால் சுற்றுலா வீசாவில் சென்று அங்கு தொழில் தேடுபவர்கள், தொழில் கிடைக்கவில்லை எனில் வெவ்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
எனவே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சுடனும் , நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து , இலங்கையிலுள்ள அந்த நாடுகளுக்கான தூதரகங்களுக்கு இது தொடர்பில் அறிவித்து வீசாவை வழங்குமாறு வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.