2023 ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளிக்கவில்லை. இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கலந்துகொள்ளவில்லை.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஷ்வரன் வாக்களிப்பில் நடுநிலை வகித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை ஜனாதிபதியும், நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (நவ 14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பித்தார்.

நவம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று (22) வரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. இந்நிலையில் இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு மீதான விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடம்பெற்றது.

இந்நிலையில், இதன் மீதான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2023 ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.