ஜனவரி முதல் சாரதி தகுதி புள்ளி வழங்கும் முறை அமுல்படுத்தப்படும் – போக்குவரத்து ஆணையாளர் நாயகம்

வாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக “சாரதி தகுதி புள்ளி” வழங்கும் முறைமையை அடுத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார்.

வீதியில் செல்லும் சாரதிகள் வாகனம் ஓட்டும் போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகள் வழங்கப்படும்.

அந்த புள்ளிகளுக்கு அமைய தண்டங்களை விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதி மீறல்களுக்காக 20 தகுதி புள்ளிகள் பெற்ற சாரதியின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதன் பின், மீண்டும் ஓட்டுனர் உரிமம் பெற, ஆரம்பம் முதலே அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பாலும், ஜனவரியில் அமைச்சரவை அனுமதியைப் பெற்று, ஜனவரி மாத இறுதியில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குறிப்பிட்டார்.