அநுராதபுரம் முதல் வவுனியா வரையான புகையிரத சேவைகள் ஜனவரி 5 முதல் ஐந்து மாதங்கள் இடை நிறுத்தம்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான புகையிரத பாதை மீள்புனரமைக்கப்படவுள்ளது.

புனரமைப்பு பணிகளுக்காக அநுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்கான புகையிரத சேவைகள் ஜனவரி 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எனினும் அநுராதபுரத்திற்கு வரும் பயணிகள் யாழ்ப்பாணம் செல்வதற்காக குறித்த காலப்பகுதியில் விசேட பஸ் சேவைகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  புதன்கிழமை (டிச.28)நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டு ஜனவரியில் புகையிரத திணைக்களத்தின் மாதாந்த வருமானம் 400 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாதாத்தின் பின்னர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் மாதாந்த வருமானம் 1000 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 150 சதவீத உயர்வாகும். எவ்வாறிருப்பினும் இந்த வருமானத்தின் மூலம் எரிபொருளுக்கான செலவினை மாத்திரமே ஈடுசெய்யக்கூடியதாகவுள்ளது. சம்பளம் மற்றும்; மேலதிக கொடுப்பனவுகளை இதன் மூலம் ஈடுசெய்ய முடியாதுள்ளது.

2023ஆம் ஆண்டு முதல் மக்களுக்கான புகையிர சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். அதற்கமைய கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் வடக்கு புகையிரகடவையை பாரியளவில் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் கடன் திட்டத்தின் கீழ் கடந்த முறை புகையிரத கடவைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டன. இதன் மூலம் 100 கிலோ மீற்றர் வேகத்தில் சுமூகமாக பயணிக்கக் கூடிய புகையிர சேவையை மக்களுக்கு வழங்கக் கூடியதாகவுள்ளது.

பல நூறு ஆண்டுகளாக அபிவிருத்தி செய்யப்படாமல் மிகவும் மோசமான நிலைமையிலுள்ள அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையான புகையிரத பாதையை ஜனவரி 5ஆம் திகதியிலிருந்து புனர்நிர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அன்றிலிருந்து அடுத்த 5 மாதங்களுக்கு இந்த புகையிரத பாதை மூடப்பட்டு புகையிரத சேவைகயும் தற்காலிகமாக இடை நிறுத்தப்படும்.

எவ்வாறிருப்பினும் அநுராதபுரத்திற்கு வரும் பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்காக இலங்கை போக்குவரத்துசபை மற்றும் மாகாண தனியார் பேரூந்து சங்கங்களுடன் இணைந்து விசேட பேரூந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கான புகையிரத சேவைகள் தொடர்ந்தும் வழங்கப்படும்.

அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையான புகையிரத பாதையை மீள்நிர்மாணிப்பதற்காக 33 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றார்.