உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை பிரான்ஸ் மற்றும் லண்டனுக்கு செல்ல உள்ளார். இந்த விஜயத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உட்பட அந்நாட்டு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார்.
மேலும், இலங்கைக்கு உதவி வழங்கும் ‘பாரிஸ் கிளப்’ உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல்களை ஜனாதிபதி முன்னெடுக்க உள்ளார். குறிப்பாக கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விடயங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான இலக்குகளை விரைவாக பூர்த்தி செய்வதற்கு ஆதரவைப் பெறுதல் என்பன ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று பிரான்ஸ் வாழ் இலங்கையர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார். லண்டனில் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு பிரான்ஸ் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளின் ஆதரவை முழுமையாக பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் விஜயத்தின் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது. லண்டன் மற்றும் பிரான்சில் ஐந்து நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் பொருளாதார மூலோபாயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார்.
இதேவேளை, நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாவது வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ரணிலுக்கும் பிரமர் மோடிக்கும் இடையிலான சந்திப்புகள் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் முன்னரும் அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தப்படி சந்திப்புகள் இடம்பெறவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கரின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது டெல்லி விஜயத்திற்கான உத்தியோகப்பூர்வ அழைப்பிதழை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார். இருப்பினும் இதுவரையில் ஜனாதிபதி ரணில் டெல்லிக்கு செல்ல வில்லை.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார பெரும் நெருக்கடியின் பின்னர் இலங்கைக்கு இந்தியா பல உதவித்திட்டங்களை வழங்கியது. குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்க முழு அளவில் இந்தியா உதவிகளை செய்தது.
மேலும், உணவு, மருந்து மற்றும் உரம் என ஏனைய சமூக பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பல உதவித்திட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் சர்வதேச அரங்கிலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அழைப்பு விடுத்தது. நெருக்கடியின்போது மாத்திரம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியிருந்தது.
ஆனால், இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு மற்றும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒத்துவைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவுக்கான உத்தியோப்பூர்வ விஜயத்தில் கலந்துக்கொள்ள உள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்கான திகதிகள் குறித்து பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.