ஜெனீவா மாநாட்டுக்கு தயாராகும் இலங்கை – பேசுபொருளாகும் அம்பிகா சற்குணநாதனின் கருத்து

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 49வது அமர்வு, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 28ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் முதலாம் தேதி வரை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்த அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக தற்போது தயாராகி வருவதை காண முடிகிறது.
இதேவேளை, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் இந்த முறை அமர்வில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், சமூக செயற்பாட்டாளர் அம்பிகா சற்குணநாதன் வெளியிட்ட கருத்தொன்று இன்று பேசுப் பொருளாக மாறியுள்ளது. பிய நாடாளுமன்ற இணைக்குழு முன்னிலையில், அம்பிகா சற்குணநாதன் வெளியிட்ட கருத்து, இலங்கையில் தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
அம்பிகா சற்குணநாதனின் கருத்து குறித்து, வெளி விவகார அமைச்சு பதில் வழங்கியுள்ளது.
அம்பிகா சற்குணநாதனின் குற்றச்சாட்டு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமாக அம்பிகா சற்குணநாதன் செயல்பட்டு வருகிறார்.
இவர், இலங்கை சிறைச்சாலை தொடர்பான முதலாவது தேசிய வேலைத்திட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கியிருந்தார். மனித உரிமை தொடர்பிலான ஆணையாளர் நாயகத்தின் இலங்கைக்கான சட்ட ஆலோசகராகவும் அவர் செயற்பட்டு வருகிறார்.
இவ்வாறான சூழ்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்ற இணைக்குழு முன்னிலையில், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி, இலங்கையின் மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை குறித்து கருத்துக்கள் பரிமாற்றப்பட்ட சந்தர்ப்பத்தில், அம்பிகா சற்குணநாதன், இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியா வருகை – நோக்கம் என்ன?
யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு; இலங்கை அரசின் புதிய திட்டம் என்ன?

மனித உரிமைகள் சட்டத்தரணியாக, அவர் இந்த அமர்வில் பல்வேறு விடயங்களை பரிமாறிக் கொண்டுள்ளார்.
01. போதைப்பொருளுக்கு எதிரான யுத்தத்தின் போது, இலங்கை போலீஸாரினால் சந்தேகநபர்கள் முறையற்ற விதத்தில் கைது செய்யப்படுகின்றமை மற்றும் தடுத்து வைக்கப்படுகின்றமை மாத்திரமன்றி, கொலை செய்யப்படுகின்றமையும் நியாயப்படுத்தப்படுகிறது.
02. அமைச்சுக்கள் இராணுவமயப்படுத்தப்படுகின்றன.
03. 2020ம் ஆண்டு முதல் அரச அதிகாரிகளின் வன்முறைகள்
04.’ ‘ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி
05. கிழக்கு மாகாண தொல் பொருள் முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணி
06. சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா என்பன குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாப்பதை உறுதி செய்வதற்கு, GSP+ வர்த்தக தடையை பயன்படுத்த வேண்டும் என அம்பிகா சற்குணநாதன் யோசனையொன்றை இதன்போது முன்வைத்துள்ளார்.
வெளி விவகார அமைச்சு குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பு

எவ்வாறாயினும், சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனின் கருத்தில் உள்ளடங்கியுள்ள தவறான வழிக்கு இட்டுச் செல்லும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பொறிமுறை மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இலங்கை நீண்ட காலமாக ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டு நடவடிக்கைகள் மற்றும் நிறுவனம் ரீதியான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அம்பிகா சற்குணநாதன் முன்வைத்துள்ள இவ்வாறான கருத்தானது, இலங்கை அரசாங்கம் பல்வேறு பிரிவுகளின் ஊடாக வெளிப்படுத்தியுள்ள முன்னேற்றத்தை அலட்சியப்படுத்துவதாக அமைகின்றது என அமைச்சு கூறுகிறது.
இவ்வாறான கருத்தானது, அரசாங்கத்தின் மீதான எண்ணம் மற்றும் நேர்மை ஆகியன குறித்து சந்தேகத்தை எழுப்புவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
GSP பிளஸ்-க்கு பாதிப்பு ஏற்படுமா?
அம்பிகா சற்குணநாதன் முன்வைத்த யோசனைகளுக்கு மத்தியில், மனித உரிமை தொடர்பாக அரசாங்கத்தின் அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய சங்கம் GSP+ நிவாரண உதவியை பயன்படுத்த வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை குறித்து, தாம் கவலை அடைவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
கோவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில், நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மில்லியன் கணக்கான இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ நிவாரணத் திட்டம் இலங்கைக்கு இல்லாது போகுமானால், அதன் பெறுபேறாக எதிர்நோக்க வேண்டிய நட்டம் காரணமாக வறுமை மேலோங்கி, வருமானம் அதிவுயர்ந்த பட்சத்தில் வீழ்ச்சி அடையும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
அத்துடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் பிரதான தொழில்துறையான கடற்றொழில் மற்றும் விவசாயம் ஆகியனவும் இதனூடாக பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளி விவகார அமைச்சின் கருத்துக்கு, அம்பிகா சற்குணநாதன் பதிலளித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குமாறு, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு GSP+ வர்த்தக நிவாரணத்தை ஒரு ஊடகமாகப் பயன்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் விடுத்த வேண்டுக்கோளின் மீதான, அரசாங்கத்தின் அதிருப்தி தனக்கு கவலையளிக்கின்றது என கூறியுள்ளார்
GSP+ வர்த்தக நிவாரண சலுகைகள், மனித உரிமை கடமைகளைப் பெறுபவரை பொறுத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட மனித உரிமை பிணைப்பானது, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடு என்ற விதத்திலும், ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ள நாடு என்ற விதத்திலும் அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டியது பொறுப்பு என அவர் கூறுகின்றார்.
இவை இலங்கையின் பிரஜைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு ஒன்றிணைந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
”சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை போன்றோர், அரசாங்கத்தின் தோல்வியை வெளிகொணர்கின்றமையினால், ஏற்படுகின்ற எதிராக பெறுபேறுகள் காரணமாக அவர்கள் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என அரசாங்கம் கூறுகின்றது. இது குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியாகும். அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சமூகத்திற்கு ஏற்படக்கூடிய எதிரான பெறுபேறுகள் ஏற்படாத வகையில் உறுதிப்படுத்துவதற்காக, இது கணிக்க முடியாத மிக மோசமான கொள்கையின் விளைவு என்பதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் கூறுகின்றார்.
விடுதலைப் புலிகளின் திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அரசாங்கம் குற்றச்சாட்டு

வெவ்வேறு இனங்களை வெவ்வேறு விதமாக கவனிப்பதாக அம்பிகா சற்குணநாதனின் கருத்தில் உள்ளடங்கியுள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டின் ஊடாக, மக்களுக்கு இடையில் வைராக்கியத்தை ஏற்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சு குற்றஞ்சுமத்துகின்றது.
சர்வதேச சமூகத்திற்கு மத்தியில் இலங்கை தொடர்பில் போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதை தவிர்த்து, நாட்டிற்குள் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைத்து இன மற்றும் மதங்களை கொண்ட நாடான இலங்கை, இவ்வாறான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் அமைச்சு குறிப்பிடுகின்றது.
சட்டவாதிக்கம், நீதிக்கான அணுகுமுறை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான நடவடிக்கைகளை வலுப்படுத்த கூடுதல் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இந்த முன்மொழிவுகள் தொடர்பிலான நியாயமான கலந்துரையாடல்களை நடத்துவதற்கும், குறைபாடுகளை நிவர்த்தி செய்துக்கொள்ள மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் சிங்கள பௌத்த இனவவாதம் மற்றும் இராணுவமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கருத்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, சிறுபான்மை சமூகத்திற்கு பாகுபாடு காட்டுவதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாததன் அடிப்படையிலேயே இவ்வாறான தெளிவற்ற கருத்தை முன்வைத்துள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளது.
இலங்கை அனைத்து இன மக்களும் வாழும் நாடு எனவும், இந்த நாட்டிற்குள் மதம் மற்றும் இன வேறுபாடின்றி அரசியலமைப்பின் கீழ் அனைத்து பிரஜைகளுக்கும் சமமான உரிமைகளுடன் வாழ உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பெருமளவு விடுதலைப் புலி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில், ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கூட, அந்த பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அழுத்தங்கள் இன்றி மக்கள் சேவையை செய்ய அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்திருந்ததாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
இலங்கையின் பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடன்: நெருக்கடியை சமாளிக்குமா ‘ராஜபக்ஷ’ அரசு?
இலங்கையில் 43 ஆண்டுகளுக்குப் பின் திருத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் – விரிவான தகவல்கள்
எனினும், காணிகளை கொள்ளையிடுதல் மற்றும் சிறுபான்மை மக்கள் அதிகளவில் வாழும் பிரதேசத்தில், மக்களின் செறிவுக்கு எதிராக விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றே தொல்பொருள் ஜனாதிபதி செயலணி என அம்பிகா சற்குணநாதன் கூறுகின்றார்.

”ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி, இனங்களுக்கு இடையில் வைராக்கியம் மற்றும் வன்முறைகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், இந்த கருத்துக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், இராணுவம் வசம் காணப்பட்ட தனியார் காணிகளில் பெரும்பான்மையானவை (92 வீதத்திற்கும் அதிகமான) காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
எஞ்சிய தனியார் காணிகளை விரைவில் வழங்குவதற்கான பொறிமுறையொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் கூறுகின்றது.
”போதைப்பொருளுக்கு எதிராக யுத்தம்” என்ற பெயரில், இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நீதிமன்றத்திற்கு எதிரான கொலைகள் மற்றும் கைதுகள் தொடர்பில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், வெளியிட்ட கருத்திற்கும், வெளிவிவகார அமைச்சு பதிலளித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அரசாங்கம் தற்போது திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும், அந்த நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இது தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவூட்டி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
சற்குணநாதன் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை சிவில் அமைப்புக்கள் எதிர்த்துள்ளன.
அம்பிகா சற்குணநாதன் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட பதிலை 161 பேர் மற்றும் 41 அமைப்புக்கள் வன்மையாக கண்டித்துள்ளன.

முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு பதிலாக, இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக, கொள்கை ஆராய்ச்சி, ஊக்குவிப்பு மற்றும் பொது சேவையில் பதிவுகளை கொண்ட ஒருவருக்கு விமர்சன ரீதியில் பதிலளிக்கும் விருப்பத்தை அரசாங்கம் மாற்று திட்டமாக தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றனர்.
தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் சுயாதீன உந்துதலை, விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களுடன் இணைத்து வெளிவிவகார அமைச்சு கருத்து வெளியிடுவதானது, அநீதியானது என்பதுடன், அது கொடூரமானதும், பயமுறுத்துவதுமானது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கைக்குள் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மேம்பாடுகளை முன்னெடுத்தல் – ஜெனீவாவில் என்ன நடக்கும்?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 49வது கூட்டத் தொடர், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் முதலாம் தேதி வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பிலான உயர் ஸ்தானிகரின் வருடாந்திர அறிக்கை மற்றும் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மற்றும் பொதுச் செயலாளர் அலுவலகம் ஆகியவற்றின் அறிக்கைகள் தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இலங்கைக்குள் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மேம்படுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றம் உட்பட இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை கண்காணிப்பது மற்றும் அறிக்கையிடுவதை மேம்படுத்துதல் மற்றும் சூழலில் விவாதிக்கப்பட வேண்டிய எழுத்துமூல புதுப்பிப்பை வழங்குதல் ஆகியவற்றையே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 49/1 பிரேரணையின் ஊடாக, மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அலுவலகம் கோரியுள்ளது.
இதன்படி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அலுவலகத்தின் A/HRC/49/9 அறிக்கை இம்முறை புதுப்பிக்கப்படவுள்ளது.
அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொய் சொல்வதற்கு முயற்சிக்கின்றது?
இதேவேளை, அம்னஷ்டி இன்டர்நெஷனல் அமைப்பின் தெற்காசிய ஆராய்ச்சியாளர் தியாகி ருவன்பத்திரன, டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

”இன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் ஏற்படுத்தப்படுகின்ற திருத்தங்களின் ஊடாக, அது சர்வதேச சட்டத்திற்கு அமைய தயாரிக்கப்படுவதாக, மனித உரிமை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைக்குழு முன்னிலையில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. இது முழுமையாக பொய்யானது. பயங்கரவாதத் தடைச் சட்டம், சரியான செயற்பாடுகள், பாதுகாப்பு, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேசத்திற்கு மத்தியில் இலங்கையின் அர்ப்பணிப்பு ஆகியன முற்றியும் முரணானது,” என அவர் கூறியுள்ளார்;
சட்ட மூலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இலங்கை சட்டத்தில் உள்ள முக்கியமான குறைபாடுகளை நிவர்த்தி செய்யத் தவறியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

Thanks BBC Tamil