அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவதற்காக ஊழியர் நம்பிக்கை நிதிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில், தனியார் துறை ஊழியர்களுக்கு அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கான பிரேரணையை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகவும், முன்மொழிவை செயல்படுத்துவதற்காக 1980ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.