தமிழ் அரசியல் சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டியது?

யதீந்திரா

இந்தக் கட்டுரையை எழுத்திக் கொண்டிருக்கும் போது, ஜரோப்பிய உலகம் பரபரப்படைந்திருக்கின்றது. ரஸ்ய ஜனாதிபதி, விளாடிமிர் புட்டின், உக்ரெயினின் கிழக்கு பகுதியின் மீதான இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கின்றார். உக்ரெயின் இராணுவத்தை ஆயுதங்களை கைவிடுமாறு ரஸ்யா அறிவித்திருக்கின்றது. தனது நாடு – எதற்காகவும் எவருக்காகவும் அச்சம் கொள்ளவில்லையென்று, உக்ரெயின் ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார். 2014இல், ரஸ்ய சார்பான உக்ரெயின் ஜனாதிபதி பதவிலிருந்து அகற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ரஸ்யா தாக்குதலை தொடுத்தது. உக்ரெயினின் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற யுத்தத்தில், 14000 அளவிலான மக்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, உக்ரெயினின் கிழக்கு பகுதிகள் இரண்டை சுதந்திர குடியரசுகளாக ரஸ்யா அறிவித்தது. இந்த பகுதிகளில் இயங்கும் கிளர்ச்சியாளர்களை ரஸ்யா இயக்கிவருகின்றது.

ரஸ்யா, நேட்டோ விரிவாக்கத்தை தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றது. இந்த பின்னணியில் உக்ரெயினை, மேற்குலகத்தின் கைப்பாவையென்றே புட்டின் குற்றம்சாட்டிவருகின்றார். இந்த பின்னணியில்தான், 2014இல், ரஸ்ய ஆதரவு உக்ரெயின் ஜனாதிபதியின் வீழ்ச்சியை தொடர்ந்து, உக்ரெயினின் கிழக்கு பகுதியை ரஸ்யா ஆக்கிரமித்தது. உக்ரெயின், நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் இணைக்கப்படமாட்டாது என்னும் உத்தரவாதத்தை புட்டின் எதிர்பார்த்திருந்தார், உக்ரெயின் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்துவிட்டால், நேட்டோவின் விரிவாகத்தால் ரஸ்யாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிவிடுமென்று புட்டின் நிர்வாகம் கருதுகின்றது. இந்த பின்னணியில்தான் உக்ரெயின் மீதான ரஸ்ய இராணுவ நடவடிக்கை தொடங்கியது.

ரஸ்யாவின் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் ரஸ்யாவின் மீது பொருளாதார தடையை அறிவித்திருக்கின்றன. ஆனாலும் புட்டின் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்கவில்லை. ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் இராணுவ நடடிவக்கையை நிறுத்துமாறு கோரியபோதும், புட்டின் அதனை கருத்தில் கொள்ளவில்லை. ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் உக்ரெயினின் கிழக்கு பகுதிகள் இரண்டையும், சுதந்திர நாடுகளாக ரஸ்யா அறிவித்திருக்கின்றது. இப்போது, முழு உக்ரெயினையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றது. அந்த பகுதியில் ரஸ்யாவின் நிரந்தரமான படைத்தளங்களை நிறுவுதற்கும் தீர்மானித்திருக்கின்றது.

ரஸ்ய – உக்ரெயின் பிரச்சினையானது அடிப்படையில் பனிப்போர் கால அரசியலில் தொடர்ச்சி. சோவியத் யூனியனின் உடைவிலிருந்து தோன்றிய நாடுதான் உக்ரெயின். உக்ரெயின் ஒரு நாடல்ல, ஒரு தேசத்திற்கான தகுதிநிலையையும் உக்ரெயின் கொண்டிருக்கவில்லை என்பதே புட்டினின் வாதமாக இருக்கின்றது. புட்டினின் வாதத்தின்படி, சோவியத் யூனியனிலிருந்து உடைவுற்ற அரசுகளில், ரஸ்யாவை தவிர, எவையுமே உண்மையான நாடுகள் அல்ல. இந்த அடிப்படையில்தான், சோவியத் யூனியனிலிருந்து பிளவுற்ற நாடுகளை ரஸ்யா அணுக முற்படுகின்றது. இந்த அடிப்படையில்தான் ஜோர்ஜியாவிலிருந்து, உடைவுற்ற இரண்டு பகுதிகளை கிறிமியாவுடன் இணைப்பதை ரஸ்யா அங்கீகிரித்தது. இதன் தொடர்ச்சியாகவே உக்ரெயினின் கிழக்கு பகுதிகளை சுதந்திர பகுதிகளாக ரஸ்யா அறிவித்தது.

ரஸ்யாவின் இராணுவ பலத்தை பொறுத்தவரையில், உக்ரெயினின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, ரஸ்யாவின் ஆதிக்கத்திற்கு அடிப்படையானதொன்றாகும். முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதியான ஜமி காட்டரின் பாதுகாப்பு ஆலோசகர், சிபிக்னியு பிரஸ்சன்ஸ்கி, 1990களில் இந்த விடயத்தை எதிர்வு கூறியிருந்தார். அதாவது, உக்ரெயின் இல்லாத ரஸ்யா, ஒரு பேரரசாக வரமுடியாது, உக்ரெயின் ரஸ்யாவிற்கு அடிபணிந்திருந்தால், ரஸ்யா தன்னிச்சையாகவே ஒரு பேரரசாகிவிடும். ஆனால் உக்ரெயின் மேலும், மேலும் மேற்கின் செல்லப்பிள்ளையாகிக் கொண்டிருக்கும் சூழலில், புட்டின், உக்ரெயினை அடிபணியச் செய்வதற்காக, இராணுவ பலத்தை பிரயோகிக்கும் முடிவை எடுத்திருக்கின்றார். ஏனெனில், நேட்டோ விரிவாக்கத்தை கட்டுப்படுத்துவதும், உக்ரெயின் ஜரோப்பிய ஒன்றியத்திற்குள் செல்வதை தடுப்பதும், சாத்தியமற்ற ஒன்றென்றே புட்டின் நிர்வாகம் கருதுகின்றது. இந்த பின்னணியில்தான் இராணுவ பலத்தை பிரயோகிக்கும் முடிவை ரஸ்யா எடுத்திருக்கின்றது. இது எப்படியானதொரு யுத்தமாக வடிவம் பெறும் அல்லது ஒரு சமர முயற்சிக்கான ஒத்திகையா என்பதை பொறுத்திருந்தே நோக்க வேண்டும்.

இந்த இடத்தில் எழும் கேள்வி? ரஸ்யா இவ்வாறு இராணுவ பலத்தை பிரயோகித்து, உக்ரெயினை ஆக்கிரமிக்க முற்படும் போது, உலக கட்டமைப்பான ஜக்கிய நாடுகள் சபையால் ஏன் எதனையும் செய்ய முடியவில்லை? எந்த சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் ரஸ்யா இராணுவ நடவடிக்கையை மேற்கொள்கின்றது? இந்த கேள்விக்கான பதில் தொடர்பில்தான் தமிழ் அரசியல் சமூகம் அதிகம் சிந்திக்க வேண்டும். ஏனெனில் தமிழ் சூழலில் சர்வதேச கட்டமைப்புக்கள் தொடர்பில் அளவுக்கதிகமான நம்பிக்கை ஊட்டப்பட்டிருக்கின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவை, சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பில் அலாதியான கதைகள் சொல்லப்படுகின்றது.

ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்வது அவசியம். அதாவது, சர்வதேச ஒழுங்கு என்பது அடிப்படையில் பலம் பொருந்திய நாடுகளால் தீர்மானிக்கப்படுவதாகும். பலம்பொருந்திய நாடுகளின் தீர்மானத்திற்கு அடிப்படையாக இருப்பது அந்த நாடுகளின் இராணுவ பலமாகும். பலம்பொருந்திய நாடுகளின் பாதுகாப்பிற்கு நெருக்கடி ஏற்படுமாக இருந்தால் – அந்த நாடுகளின் இறுதி தெரிவு இராணுவ வழிமுறையாகவே இருக்கும். இந்த பின்னணியில்தான் அமெரிக்கா ஈராக்கின் மீது தாக்குதலை மேற்கொண்டு, சதாம் உசைனின் இராணுவத்தை அழித்தது. பின்லெய்டனின், செப்டம்பர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மீது தாக்குதலை மேற்கொண்டு, 20 வருடங்கள் அங்கு நிலைகொண்டது. இந்த அடிப்படையில்தான் ரஸ்யா தனது பாதுகாப்பு கேள்விக்குள்ளாகுவதாக குற்றம்சாட்டி, அயல் நாடான உக்ரெயின் மீது படையெடுத்திருக்கின்றது. எந்த சட்டங்களின் அடிப்படையில் இவைகள் நடக்கின்றன?

 

இந்த விடயங்கள் எதனை உணர்த்துகின்றன? அரசல்லாத மக்கள் கூட்டமான நாங்கள், அரசுகளின் உலகத்தில், இலங்கை அரசொன்றை எதிர்த்து நீதியை கோருகின்றோம். அரசுகளின் உலகத்தில் அவ்வளவு எளிதாக தமிழர்கள் கோரும் நீதி கிடைத்துவிடாது. இன்று தமிழ் சூழலில் மியன்மார் – ரொகியங்கா முஸ்லிம் மக்களின் விவாரம் தொடர்பில் சிலர் உணர்ச்சிவசப்படுகின்றனர். ஆனால் அவ்வாறானவர்கள் விடயங்களை ஆழமாக புரிந்துகொள்வதில்லை. புரிந்துகொள்ளவும் முயற்சிப்பதில்லை. 2017இல், மியன்மாரிலுள்ள ரிங்கின் மானிலத்தில் வாழ்ந்த, ரொகியங்கா முஸ்லிம்கள் படுகொலைக்கு ஆளானார்கள். பர்மிய இராணுவமும், அங்குள்ள பிக்குகள் அமைப்பும்தான் இந்த படுகொலைகளை அரங்கேற்றியது. படுகொலைகளை தொடர்ந்து, சுமார் ஏழு லட்சத்திற்கு மேற்பட்ட ரொகியங்கா மக்கள் பங்காளாதேசில் அடைக்கலம் புகுந்தனர். இவர்கள் முஸ்லிம்கள் என்பதால், முஸ்லிம் நாடான பங்களாதேஸ் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. பிறிதொரு ஆபிரிக்க-முஸ்லிம் நாடான காம்பியா, இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநிதீயென்னும் வகையில், உலகளாவிய முஸ்லிம்களின் கூட்டமைப்பான 57 நாடுகளை கொண்ட (Organisation of Islamic Cooperation) (OIC) இஸ்லாமிய ஒத்துழைப்புக்களுக்கான அமைப்பே, காம்பியாவை இந்த விடயத்தில் ஈடுபடுத்தியது. பங்களாதேஸ் அடைக்கலம் கொடுத்ததற்கு பின்னாலும் குறித்த அமைப்பே இருந்தது. உலகளாவிய இஸ்லாமிய ஒத்துழைப்பு என்னும் வகையிலேயே இந்த விடயம் கையாளப்பட்டது.

இதன் காரணமாக, பங்களாதேஸ் பிரமதமர் ஷேக் ஹசினாவை, ‘மனித நேயத்தின் தாய்’ என்று இந்த நாடுகள் வர்ணிக்கின்றன. ஆனால் அந்த மனித நேயத்தின் தாய், இலங்கையின் பொறுப்பு கூறல் தொடர்பான தீர்மானங்களின் போது, இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தார். ரொகிங்கியர்களின் விடயத்தில் மனித நேயம் காண்பித்த, பங்களாதேஸ், ஏன் இலங்கை விடயத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை? விடயங்களை ஆழமாக புரிந்துகொள்வதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஏனெனில், நாடுகளின் முடிவுகள் எவையும் மனித உரிமைகளின் அடிப்படையிலோ, அல்லது மனித நேயத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதில்லை. மேற்குலக நாடுகளுக்கு மனித உரிமைகள் சார்ந்து கரிசனையிருந்தாலும் கூட, அந்த நாடுகளின் பாதுகாப்பு மற்றும், நாடுகளுக்கிடையிலான உறவுகளை கருத்தில் கொண்டுதான் அவர்கள் முடிவுகளை எடுப்பர். இதனை விளங்கிக் கொள்ளாமல் கருத்துக்களை முன்வைப்பது அபத்தம். யுத்தம் முடிவுற்று பன்னிரெண்டு வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட, தமிழ் மக்களுக்கு பாரியளவில் அநீதியிழைக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டு, முழுமையாக தமிழர்களுக்கு ஆதரவளிப்பதற்கு ஒரு நாடு இருக்கின்றதா? சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பில் வாதங்கள் செய்வோர், இதுவரையில் ஒரு நாட்டின் ஆதரவையாவது பெற்றிருக்கின்றனரா? இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது என்ன? நாம் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றோம்.

இந்த நிலையில் பலமான நண்பர் ஒருவர் இல்லாமல் இந்த அரசுகளில் உலகில் நம்மால் மூச்சுவிட முடியாது. இந்த அடிப்படையில்தான் நாம் இந்தியாவின் ஆதரவை எவ்வாறு பெறுவதென்று சிந்திக்க வேண்டும். இந்தியாவின் ஆதரவென்பது வெறுமனே தமிழ் நாடு மட்டுமல்ல. ராஜீவ்காந்தியை ‘நாங்கள்தான்டா கொன்றோம்’ – என்று கூறுகின்ற கூட்டங்களோடு நிற்பதல்ல. இதன் மூலம் ஒருபோதும் புதுடில்லியை நோக்கி செல்ல முடியாது. புதுடில்லியை நோக்கி செல்லாமல் அரசுகளின் உலகத்தில் தமிழர்கள் மூச்சுவிட முடியாது. புதுடில்லியை நோக்கிச் செல்வதென்பது, பேசுவது போன்று, எழுதுவது போன்று, இலகுவானதல்ல. இந்தியா தமிழர் விடயத்தில் கரிசனை கொண்டிருந்தாலும் கூட, தமிழர் தரப்பால் விடப்பட்ட கடந்த காலத் தவறுகள் புதுடில்லிக்கு சில கசப்பான அனுபவங்களை கொடுத்திருக்கின்றது. இதனை போக்கும் வகையில் தமிழர் தரப்புக்கள் செயலாற்ற வேண்டும். அதிகம், அதிகம், புதுடில்லியோடு ஊடாடுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியது ஒர் ஆரம்பமாக இருக்கலாம் – ஆனால் முடிவல்ல. முடிவிற்கு, இன்னும் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டும். ஏனெனில் நிலைமைகள் அதிகம் மாற்றமடைந்துவிட்டது. முன்னர் இந்தியாவிடம் எதிர்பார்த்ததை இப்போது எதிர்பார்க்க முடியாது. இப்போதைக்கு எதனை எதிர்பார்க்க முடியுமோ – அதனைத்தான் எதிர்பார்க்க முடியும்.