தமிழ் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்!

விடுதலைக் கோரி மெகசின் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்று உண்ணாவிரதத்தை கைவிட்டதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

நேற்று தான் மெகசின் சிறைச்சாலைக்கு சென்று, கைதிகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கிய உறுதி மொழியை அடுத்து கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 11 கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி எழுதிய கடிதத்தை தம்மிடம் கையளித்ததாகவும், அதனை சட்டமா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வழங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

சட்ட விவகாரங்கள் தொடர்பில் அவ்விடத்திலிருந்தே கைதிகளின் சட்டத்தரணிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்த மூன்று கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களையும் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 13 கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 6 ஆம் திகதி மாலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தமிழ் அரசியல்  கைதிகளின் உறவினர்கள் ஆரம்பித்த  அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்  இன்று கைவிடப்பட்டது.

ஆளுநரின் வாக்குறுதியை அடுத்து, தற்காலிகமாக உண்ணாவிரதத்தை கைவிடுவதாகவும் தமது வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால், தமது போராட்டம் தொடரும் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.