தரம் ஒன்றில் இருந்து மாணவர்களுக்கு ஆங்கிலம்

தரம் ஒன்றில் இருந்து மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பழக்கத்தை அதிகரிக்க 2023ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இதற்கமைய அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச பாடசாலைகளின் முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 13,500 ஆசிரியர்களை நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பயிற்றுவிப்பாளர்களாகப் பயிற்சியளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்காலத் தேவைக்கு ஏற்ற வகையில் பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஆங்கில மொழிமூலப் பாடப்புத்தகங்களில் உள்ள இலக்கணப் பிழைகள் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவ்வாறான இலக்கணப் பிழைகள் உள்ளதா என்பதைக் கண்டறியுமாறு தேசிய கல்வி நிறுவகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் இலங்கையிலுள்ள தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகள் விரும்பினால் சிங்கள மொழிமூலத்தில் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு பரிசீலிக்கப்பட்டது.

தற்பொழுது பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதாகவும், இதனைத் தடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்துத் தெரிவித்ததுடன், இது தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பதில் வழங்கினார்.