அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.தவறான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை முழு நாட்டுக்கும் எதிர்வினையாக மாறியுள்ளது.
அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராகவுள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை பகுதியில் சனிக்கிழமை (5) மாலை இடம்பெற்ற கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.நீண்டகாலமாக கடைப்பிடிக்கும் தவறான பொருளாதார கொள்கை மற்றும் அரசியல் கலாசாரம் மாற்றியமைக்க வேண்டும்.ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தை நாட்டு மக்களே மாற்றியமைக்க வேண்டும்.
நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அரசியல் ரீதியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என எண்ணிக் கொண்டு நாட்டு மக்கள் தவறான அரசியல் நிர்வாகத்தை, தவறான தலைவர்களை தெரிவு செய்தார்கள். தெரிவு செய்யப்பட்ட தலைவர் தவறானவர் என மீண்டும் மீண்டும் தவறான தலைமைகளையே தெரிவு செய்கின்றார்கள் .
தற்போதைய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்னைய அரசாங்கங்களிலும் பதவி வகித்துள்ளார். ஆகவே எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவும் இவ்வாறு சகல அரசாங்கங்களிலும் அமைச்சு பதவி வகித்துள்ளார்.ஆகவே உண்மையான அரசியல் மாற்றம் இடம்பெறவில்லை.
உண்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் பொருளாதார கொள்கை மாற்றியமைக்க வேண்டும்.
வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளோம்.கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி இலங்கை வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என மத்திய வங்கி உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது,பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நாங்கள் தயாராகவுள்ளோம் என்றார்.