துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் சுமார் 132 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளதாக இலங்கை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
இந்தியப் பெருங்கடலில் தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து மையமாக மாற இலங்கை எதிர்பார்க்கிறது.
இதற்கமைய துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் சுமார் 132 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளது.
இந்த முதலீடுகள் துறைமுக நடவடிக்கைகளில் இருந்து கிடைக்கும் வருவாயின் மூலம் செய்யப்படும்.
கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜெயா கொள்கலன் முனையத்திற்கு 32 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இரண்டு முனையங்களும் அரசுக்கு சொந்தமான இலங்கை துறைமுக அதிகாரசபையின் துணை நிறுவனங்களாகும்.
மேற்கூறிய முதலீடுகளைத் தவிர, திருகோணமலை துறைமுகத்தை மொத்த சரக்கு நடவடிக்கைகளுக்காகவும், காலி துறைமுகத்தை சுற்றுலாத் துறைக்காகவும் படகு சேவையுடன் மேம்படுத்தவும், பெரிய கப்பல்களை நங்கூரமிட வசதி செய்யவும் எதிர்பார்க்கிறோம். என கூறியுள்ளார்