தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் C.V.விக்னேஸ்வரனும் நேற்று (23) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தேசிய சபையில் இணைந்துகொள்ளுமாறு இதன்போது பிரதமர் தமக்கு அழைப்பு விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் ஏதாவது இரண்டை முதலில் நிறைவேற்றுமாறும் அதன் பின்னர் தேசிய சபையில் இணைவது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் தாம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் C.V.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
இதேவேளை, தேசிய சபையில் இணைவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் கூடி முடிவெடுக்கவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
தேசிய சபையில் பங்கேற்றாலும் நடைமுறையில் அதனை எவ்வாறு செயற்படுத்தப்போகிறார்கள் என்பதனை பார்த்தே அடுத்த கட்ட தீர்மானத்தை எடுக்க வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
உண்மையான நோக்கத்தில் அதனை செயற்படுத்தினால், அதில் பங்குபற்ற முடியும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால், அதில் பங்கேற்க முடியாது எனவும் பேச்சுவார்த்தைகளின் பின்னரே தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் கட்சியிலும் எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், தேசிய சபையில் தனது பெயர் இருப்பது ஊடகங்களில் தகவல் வௌியாகும் வரை தனக்கு தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.