உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குப் பிரதான தடையாக அரசாங்கம் கூறுகின்ற நிதி நெருக்கடிக்குத் தீர்வு வழங்குவதற்கு ஏதேனும் ஒரு தரப்பினர் தயாராக இருந்தால், தேர்தலை நடத்துவதற்குத் தயாரா என அரசாங்கத்திடம் பெப்ரல் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.
சட்டரீதியான காரணங்களை முன்வைக்காமல், உள்ளூராட்சித் தேர்தலைக் காலவரையறையின்றி ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தருணத்தில் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க முற்போக்கான தேர்தல் சீர்திருத்தங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய எல்லை நிர்ணய நடவடிக்கையின் மூலம் தொகுதிகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்த பின்னர் புதிய தேர்தல் முறை எப்படி இருக்கும் என்றும் ரோகண ஹெட்டியாராச்சி பிரதமரிடம் வினவியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 வீதமாகக் குறைக்கும்போது இளைஞர், பெண் ஒதுக்கீட்டுக்குத் தலா 25 வீதம் ஒதுக்கப்படுமா என்றும் ரோஹன ஹெட்டியாராச்சி, பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.