தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக வேண்டியும், சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்கலைக் கழக மாணவர்கள் வடக்கிலிருந்து கிழக்கிற்கு வந்துள்ளார்கள். இதற்கு வலுச் சேர்ப்பதற்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து 500 இற்கு மேற்பட்டடோர் கலந்து கொண்டுள்ளோம். எமது போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே திருக்கோவிலில் வைத்து எமது உறவுகளை தங்கவேலாயுதபுரத்திற்குச் செல்வதற்குப் புறப்பட்ட வேளை இருவர் முகமூடிகளை அணிந்து கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளை உடைத்துவிட்டுச் சென்றனர். இதனால் சாரதி நூலிடையில் உயிர் பிழைத்துள்ளார். தற்போது நாம் தேடிக் கொண்டிருப்பது எமது உறவுகளைத்தான். நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராட வரவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தங்கராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அம்பாறை மாவட்டத்திலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தங்கராசா செல்வராணியின் தலைமையில் பேரூந்துகளில் பொதுமக்கள் தமது காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் புகைப்படங்களைத் தாங்கியவண்ணம், செவ்வாய்கிழமை (07) நண்பகல் மட்டக்களப்பை வந்தடைந்தனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-
எனக்கு திங்கட்கிழமை(06) நள்ளிரவு 12 மணி வரையில் 6 நீதிமன்ற உத்தரவுகள் கிடைத்துள்ளது. செவ்வாய்கிழமை(07) நீதிமன்றிற்குச் சென்றுதான் தற்போது இப்போராட்டத்திற்குச் சமூகம் கொடுத்துள்ளேன். புலனாய்வாளர்கள் எம்மை மிகவும் துன்பப்படுத்துகின்றார்கள்.
நாங்கள் தேடிக்கொண்டிருப்பது எங்கள் உறவுகளைத்தான் நாங்கள் அயுதம் ஏந்திப் போராட வரவில்லை. தடிகளைக் கொண்டு வரவில்லை, எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதையே கேட்டு வருகின்றோம். எமது போராட்டம் வெற்றி பெறவேண்டும். 170 இற்கு மேற்பட்ட எமது உறவுகளை இழந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தற்போதுள்ள உறவுகளை நாம் காப்பாற்ற வேண்டும். எமக்கான நீதி இந்த போராட்டத் தொடரில் வரவேண்டும் என இதன்போது அவர் தெரிவித்தார்.