இந்த நாட்டில் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என்பவற்றை விதைத்து சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையகம் என்ற அனைத்து மக்களிடையேயும் முரண்பாடுகளை ஏற்படுத்தி, பிரித்து, வன்முறைகளை தூண்டி, இந்த அரசாங்கம் ஆட்சியினை தக்க வைத்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் சதீஷ் செல்வராஜ் தெரிவித்தார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இளைஞர்களை அணி திரட்டுவதும், அவர்களை தெளிவுபடுத்துவதும் எங்களின் கடப்பாடாக இருக்கின்ற காரணத்தினால், நாங்கள் நாட்டிலுள்ள அனைத்து தமிழ், சிங்கள, முஸ்லீம், மலையகம் என்ற பேதம் இல்லாமல் எல்லா இளைஞர்களும் அணிதிரண்டு நாட்டினை கட்டியெழுப்புவதற்காக ஒரு சக்தியினை வழங்குவதற்காக அணி திரள வேண்டும் என்பதற்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கிறோம்.
பொருளாதார ரீதியாக எமது நாடு பாரிய வீழ்ச்சியை கண்டிருக்கிறது. அதீத வட்டி, அதீத வரி, அதேவேளை மக்கள் நாட்டில் வாழ முடியாத சூழ்நிலையை இந்த ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.
இந்த, நாட்டில் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என்பவற்றை விதைத்து சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையகம் என்ற அனைத்து மக்களிடையேயும் முரண்பாடுகளை ஏற்படுத்தி, பிரித்து, வன்முறைகளை தூண்டி அவர்கள் தங்களுடைய ஆட்சியினை தக்க வைத்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்கள்.
அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தினை பார்ப்போமாக இருந்தால், 3,456 பில்லியன் ரூபா வருமானமாக கொள்ளப்படுகிறது. செலுத்தப்பட வேண்டிய கடன் உட்பட நாட்டினுடைய மொத்த செலவு 7,879 பில்லியன் ரூபா, அதிகமாக காணப்படுகிறது. வருடத்திற்ககான கடன் தேவை 4,979 பில்லியன் ரூபாவுக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது. கடன் மொத்த செலவில் கடன் வட்டிக்கு மாத்திரம் 53.53 சதவீதம் பங்கினை இங்கு ஒதுக்க வேண்டிய நிலைமைக்கு இந்த நாடு தள்ளப்பட்டிருக்கிறது.
வருமானத்தை எடுத்துக்கொண்டால் மறைமுக வட்டி, விலையேற்றம் போன்ற வட்டி மூலம் வருமானத்தை திரட்டிக்கொள்வதற்கு இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதே தவிர நாட்டில் விழுந்து கிடக்கும் உற்பத்தி பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையிலும் இந்த அரசாங்கம் ஈடுபடாது. மேலும் நாட்டு மக்களை ஒட்ட சுரண்டி, பிழிந்தெடுக்கிற வேலையில் ரணில் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
கூலித்தொழில் செய்ய முடியாத நிலைக்கு இன்றை தொழிலார்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு விவசாயிகள் மிகவும் பாரியளவில் சிக்கல்களுக்கு முகங்கொடுத்து இருக்கிறார்கள். நாட்டினுடைய விவசாய துறை சீரழிந்து வீழ்ந்து இருக்கிறது.
யூரியா, இரசாயனப்பசளை பிரச்சினைகள், இது போன்று மீன்பிடிக்கு பெற்றோல், டீசல் பிரச்சினைகள், இதனை மேம்படுத்துவதற்காக முறையான திட்டமின்மை காரணமாக மீன்பிடி பாரியளவு வீழ்ச்சி கண்டிருக்கிறது. இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகமாக இருக்கிற இந்த நேரத்தில் இதற்கு தீர்வு இல்லாமல் இருக்கிறார்கள். எங்களுடைய கடல் வளம் வெளிநாட்டு கம்பனிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது.
இந்த இனவாத ஆட்சியாளர்களை விரட்டியடிக்க தேசிய ஒற்றுமையினை முன்னிறுத்தி இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற இந்த வேளையில் எமது நிலம், எமது உரிமை, எமது மக்கள் என இந்த ஊழல்வாதிகளை, இனவாத ஆட்சியாளர்களை விரட்டியடித்து தேசிய ஒற்றுமையினை கட்டியெழுப்புவதன் ஊடாக எல்லா இன மக்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்வதற்கு கட்டியெழுப்பவது நம் எல்லோரினதும் கடமையாகும். – என்றார்.