நியூயோர்க்கில் ஜீ.எல். பீரிஸ் – ஜெய்சங்கர் சந்திப்பு

கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தும் வெற்றிகரமான நடவடிக்கைகள் தொடர்பான நிலைமை குறித்து பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு விளக்கினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்தல், கைதிகளாகவுள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்தல் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் சபை போன்ற சுயாதீன நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற முக்கிய பிரச்சனைகள் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியன ஒத்துழைப்புடன் செயற்படுவதனை சுட்டிக்காட்டி, 2009 மே மாதத்தில் மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னர், எஞ்சிய விடயங்களைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடைமுறைகள் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பீரிஸ் வெளியுறவு அமைச்சருக்கு விளக்கினார்.

பல முனைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முயற்சிகள் தொடர்வதாகவும் அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பல்வேறு பகுதிகளில் முன்னேறுதற்காக வலுவான அரசியல் விருப்பம் இருப்பதாக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடுகளுக்கு எதிரான தீர்மானங்கள் அந்த நாடுகளின் அனுமதியின்றி செயற்படுத்தப்பட முடியாது என்ற அடிப்படையில் இலங்கை எடுத்த கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, பல நாடுகளை பெரிதும் ஊக்குவித்தன என்பதை சுட்டிக்காட்டி, வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லும் போது, வேறு எந்த வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிநாட்டு அமைச்சர் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மிக முக்கியமானவை என்பதை இரு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டனர்.

இரு நாடுகளினதும் நலன் கருதி, இனப்பிரச்சினைகளுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான மற்றும் நீதியான தீர்வுகள் அவசியம் என அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். எமது உறவுகள் ஒரு பிரச்சினைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது என இந்திய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

செயற்படுத்தப்பட வேண்டிய திட்டங்களின் நடைமுறை ரீதியான நிறைவானது உறவுகளை மேம்படுத்துவதில் புதுடெல்லிக்கு அதிக நம்பிக்கையை அளிக்கும் என்பதனை சுட்டிக்காட்டி, அதனை நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.

மக்களுக்கிடையிலான தொடர்புகளை அதிகரித்தல் உட்பட பல்வேறு வழிகளில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார். பல்வேறு அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடன் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை விரைவுபடுத்தும் முகமாக, நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.