இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் எஸ்கடெல் அம்மையார் மற்றும் துணைத் தூதுவர் ஹில்டே பேர்க் ஹான்சன் அம்மையார் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.
இன்று புதன்கிழமை பிற்பகல் கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் (ரெலோ) பாராளுமன்ற உறுப்பினருமான கோ. கருணாகரம் மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கு இலங்கையின் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்து தொடர்ந்து உறுதியான ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள நாடான நோர்வேயுடன் தமிழ் தரப்பின் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றதாக ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்தார்.