வவுனியா வடக்கில் பாதீடு தோல்வி: நல்லூரில் நிறைவேறியது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும் இன்று (7) தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு கடந்த மாதம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அது மீள் திருத்தம்செய்யப்பட்டு இன்றைய தினம் சபை தவிசாளர் எஸ்.தணிகாசலத்தால் சபையில் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து பாதீடு தொடர்பான வாதங்கள் இடம்பெற்றதுடன், பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சைக் குழு உள்ளடங்கிய 17 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினருமாக 9 பேர் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன்படி 9 மேலதிக வாக்குகளால் வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகத் தோற்கடிக்கப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரனால் அடுத்த வருடத்திற்கான பாதீடு இன்று சபையில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது குறித்த பாதீட்டுக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்களும், சுயேச்சை குழுவின் 2 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 12 பேர் பாதீட்டுக்கு ஆதரவளித்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களுமாக 8 பேர் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.