ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம்.
ராஜபக்ஷர்களே மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை இல்லை என்ற தவறான கருத்தை மே தின கூட்டத்துடன் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். பெரும்பாலான மக்கள் பொதுஜன பெரமுனவுக்கும்,ராஜபக்ஷர்களுக்கும் சார்பாகவே செயற்படுகிறார்கள்.
மே தின கூட்டம் தொடர்பில் கடந்த வாரம் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும்,பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.
பிரதான வீதியை மரித்து மேடை அமைத்து கூட்டத்தை நடத்த எந்த அரசியல் கட்சிக்கும் அனுமதி வழங்க முடியாது என பாதுகாப்பு தரப்பினர் உறுதியாக குறிப்பிட்ட பின்னணியில் ஒரு அரசியல் கட்சிக்கு மாத்திரம் எவ்வாறு நடுவீதியில் மேடையமைக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.
பாராளுமன்றத்தை சுற்றி வளைக்கும் வகையில் மக்களை தவறாக வழி நடத்திய அரசியல் கட்சிக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்தோம்.
இதுவரை இந்த முறைப்பாடு தொடர்பில் உரிய அரசியல் கட்சி பிரநிதிகளிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவில்லை.
ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் இந்த அரசியல் கட்சி முறையற்ற வகையில் செயற்படும் போது அதிகாரம் கிடைத்து விட்டால் இவர்கள் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பார்கள் என்பதை மக்கள் ஆராய வேண்டும்.
பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டத்தில் எமது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினோம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக்கு அமைய அரசியல் தீர்மானங்களை எடுத்து முன்னோக்கிச் செல்வோம்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகிறோம். எமது கட்சி கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். அவர் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவாக இருக்கலாம்.ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என்றார்.