“பதவி மாற்றத்தின் மூலம் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியாது” – மைத்திரிபால சாடல்

முக்கிய பதவியில் உள்ள ஒருவரை மாற்றுவதன் மூலம் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மத்திய வங்கி ஆளுநர் பதவியில் மாற்றத்தை கொண்டுவர அரசாங்கம் தயாராகிவரும் நிலையில், ஊடகங்களுக்கு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தா்.
பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான வளர்ச்சிகளை விவாதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஒரு நபரை மாற்றுவதன் மூலம் அதை அடைய முடியாது. இறக்குமதி/ஏற்றுமதி மற்றும் நிறுவனப் பங்குகள் போன்ற பல அம்சங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் தாக்கம் செலுத்துகின்றன”என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பிரச்சினைக்கான தீர்வு ஒரு பொதுவான வளர்ச்சி கட்டமைப்பில் உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
நாட்டின் பொருளாதார பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியாது. இதற்கு ஆரோக்கியம் மற்றும் கல்வி போன்ற மேம்பாட்டு அம்சங்களை உள்ளடக்கிய நீண்ட காலத் திட்டம் அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.